தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவிழந்து விட்டதால் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. இந்நிலையில், கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 29-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோர பகுதிகளில் நவம்பர் 30-ம் தேதியும், டிச., 1ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை என்பது மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற தாக்கத்தில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில் தமிழகத்துக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.