தமிழகத்திற்கு துணை நிற்போம்: கேரள அரசு உதவிக்கரம்

 

தமிழகத்திற்கு துணை நிற்போம்: கேரள அரசு உதவிக்கரம்

கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் தமிழகத்திற்கு கேரள மாநிலம் துணை நிற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார்

திருவனந்தபுரம்: கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் தமிழகத்திற்கு கேரள மாநிலம் துணை நிற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதமடைந்துள்ளன. புயல் கரையை கடந்த போது, லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்த 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர் 493 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை ஏராளமானோர் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கேரள முதல்வர் தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “கஜா புயலின் கோர தாண்டவத்திலிருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும். குடி தண்ணீர், மெழுகுவர்த்திகள், உலர்ந்த உணவு பொருட்கள், புதிய ஆடைகள் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு வழங்கப்படும். கேரள அரசின் பேரிடர் மேலாண்மை வாரியம் இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும்”  எனப் பதிவிட்டுள்ளார்.