தமிழகத்திற்கு அக்டோபர் 7-ம் தேதி ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்திற்கு அக்டோபர் 7-ம் தேதி ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அதிகனமழைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் அதிகனமழைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 8-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து  நேற்று முதல் தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் புதுக்கோட்டை,நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல இடங்களில் விடிய விடிய கன மழை பெய்தது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருநின்றவூர், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 7-ம் தேதி அதி கனமழை பெய்யும் எனவும் அதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் அன்றைய தினம் 25 செ.மீ.க்கும் மேல் மழை பதிவாகும் எனவும் மாவட்ட நிர்வாகிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறுகையில், 1275 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் 60-80 பேரும், இதர மாவட்டங்களில் 45-50 பேரும் மீட்பு பணிக்காக தயார் நிலையில் இருக்கின்றனர். தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்படும். 

ஏற்கனவே மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.