தனியாருக்கு கொடுக்கும் வரையாவது ஏர் இந்தியாவை நடத்தணும்ன்னா பணம் வேணும்…. மத்திய அரசுக்கு வேண்டுகோள்

 

தனியாருக்கு கொடுக்கும் வரையாவது ஏர் இந்தியாவை நடத்தணும்ன்னா பணம் வேணும்…. மத்திய அரசுக்கு வேண்டுகோள்

தனியாருக்கு விற்பனை செய்யும் வரையாவது ஏர் இந்தியாவை நடத்தணும்ன்னா ரூ.2,400 கோடி கடன் வாங்க உடனடியாக உத்தரவாதம் அளிக்கும்படி அந்நிறுவன நிர்வாகம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் மத்திய அரசுக்கு லாபத்தை அள்ளி கொடுத்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது அதே அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் கடுமையான கடன் நெருக்கடியும் அந்நிறுவனத்தை படாதபாடு படுத்தி வருகிறது.

ஏர் இந்தியா

இதற்கு மேலும் ஏர் இந்தியாவை நாம நடத்தினால் நமக்கு மேலும் நஷ்டம் ஏற்படும் என நினைத்த மத்திய அரசு அந்நிறுவனத்தை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து தற்போது ஏர் இந்தியாவை எப்படியேனும் தனியாருக்கு விற்று விட வேண்டும் என இரண்டாவது கட்டமாக தீவிரமாக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அஸ்வானி லோஹினி

இந்த சூழ்நிலையில், ஏர் இந்தியாவை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் புதிதாக ரூ.2,400 கோடி கடன் வாங்க இறையாண்மை உத்தரவாதம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஏர் இந்தியா நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குனர் அஸ்வானி லோஹினி பேஸ்புக்கில், விற்பனை செய்யும் வரையாவது ஏர்இந்தியாவை நடத்துவது அவசியம் என பதிவு செய்துள்ளார். மேலும், கடினமான சூழ்நிலையிலும் ஏர் இந்தியா பணியாளர்கள் தங்களால் முடிந்ததை திறமையாக செய்கிறார்கள். அது பாராட்டுதலுக்கு உரியது எனவும் தெரிவித்து இருந்தார்.