தனிக்கட்சி தொடங்க போகிறேனா? தம்பிதுரை விளக்கம்

 

தனிக்கட்சி தொடங்க போகிறேனா? தம்பிதுரை விளக்கம்

தஞ்சாவூர்: தம்பிதுரை தனிக்கட்சி தொடங்கப்போவதாக வெளியான தகவல்கள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங் – விசிக – மதிமுக – இடதுசாரிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது.  ஆனால் கூட்டணி குறித்து அதிமுகவோ, பாஜகவோ இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றன. அதேசமயம் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகிறார். இதன் காரணமாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், அவருக்கும் வார்த்தை மோதல் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி, பாஜகவின் 10 % இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை அதிமுக கட்சி சார்பாக தம்பிதுரை மட்டும்தான் காத்திரமாக எதிர்த்து வருகிறார். இதனால் முதல்வருக்கும் தம்பிதுரைக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது என தகவல்கள் வெளியாகின

இதனையடுத்து தம்பிதுரை அதிமுகவில் இருந்து விலக போகிறார் எனவும் அவர் டிடிவி தினகரன் கட்சியில் இணைய போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி அவர் தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், திருவிடைமருதூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவும், அதிமுகவும் கூட்டணி கட்சி அல்ல. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பொதுக்குழு, செயற்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும். தமிழகத்திற்கு வர வேண்டிய 16 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழகத்திற்கான பல்வேறு சலுகைகள் வழங்க மத்திய அரசு மறுப்பதால் உரிமையுடன் கேட்டு வருகிறேன். தனிக்கட்சி தொடங்கும அளவுக்கு எனக்கு தகுதியில்லை என்றார்.