தடை!!!அதை உடை!!! பட்டாசு தடையை உடைத்தெறிந்த தமிழக மக்கள்

 

தடை!!!அதை உடை!!! பட்டாசு தடையை உடைத்தெறிந்த தமிழக மக்கள்

பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்த கால நிர்ணயத்தை தாண்டி தமிழக மக்கள் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

சென்னை: பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்த கால நிர்ணயத்தை தாண்டி தமிழக மக்கள் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை இன்றும் நாளையும் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலை முதலே மக்கள் தீப ஒளித் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், பட்டாசு வெடிக்கும் கால நேரத்தை நீட்டிக்க கோரியும் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கால நேரத்தை நீடிக்க மறுப்பு தெரிவித்ததுடன், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம், அந்த நேரத்தை தமிழக அரசே நிர்ணயித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் எனவும், இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்திருந்தது. விஏஓ முதல் காவல் உயர் அதிகாரிகள் வரை நீதிமன்ற தீர்ப்பு கடைப்பிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். தீர்ப்பை மீறுவோர் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு பணித்திருந்தது.

இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் கால நிர்ணயத்தை தாண்டி, அதாவது; காலை 7 மணி வரை என்பதை தாண்டி 11 மணிக்கும் மேலாக தமிழக மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடித்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதற்காக தான். உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், குழந்தைகளை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களின் மகிழ்சிக்காக பட்டாசுகளை வெடிக்க வேண்டியுள்ளது என்கிறார்கள். மேலும், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.