தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த இயக்குநர் கௌதமன் கைது!

 

தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த இயக்குநர் கௌதமன் கைது!

வரும் 5 ஆம் தேதி தஞ்சையில் குடமுழுக்கு நடத்தும் போது சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னால் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பை தெரிவிப்போம் என்று இயக்குநர் கௌதமன் கூறினார்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி தஞ்சை முழுவதும் 5,000 போலீசார் குவிக்கப்பட்டு கோவிலைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடமுழுக்கைத் தமிழ் முறையில் நடத்துவதா அல்லது சமஸ்கிருத முறையில் நடத்துவதா என்று பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், இக்கோவிலில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது. 

ttn

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் கௌதமன், குடமுழுக்கைத் தமிழில் மட்டுமே நடத்த வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் இடம் கடந்த 30 ஆம் தேதி  மனு அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன், தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கை சமஸ்கிருதத்திலும் நடத்தலாம் என்ற தீர்ப்பு வேதனை அளிக்கிறது. எங்களுக்குச் சம்பந்தம் இல்லாத சமஸ்கிருதம் எங்களுக்குத் தேவை இல்லை. வரும் 5 ஆம் தேதி தஞ்சையில் குடமுழுக்கு நடத்தும் போது சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னால் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பை தெரிவிப்போம் என்று கூறினார்.

ttn

இந்நிலையில், சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி பயணம் செய்த இயக்குநர் கவுதமன் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தஞ்சை குடமுழுக்கில் ஏதாவது போராட்டம் செய்யக் கூடும் என்று கிடைத்த தகவலின் காரணமாக முன்னெச்சரிக்கையாகக் கைது செய்துள்ளோம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.