தங்கள் தவற்றை மறைக்க என்னைக் காரணம் காட்டுகிறார் ஜெயக்குமார்! – திண்டுக்கல் லியோனி பதிலடி!

 

தங்கள் தவற்றை மறைக்க என்னைக் காரணம் காட்டுகிறார் ஜெயக்குமார்! – திண்டுக்கல் லியோனி பதிலடி!

கடந்த 12ம் தேதி வண்ணாரப்பேட்டையில் நடந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான பொதுக்கூட்டத்தில் நான்தான் தூண்டிவிட்டேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை மறுக்கிறேன். அந்த கூட்டத்தில் அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி அமர்ந்திருந்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் போராட்டத்தில் தங்களுடைய தவற்றை மறைக்க என்னை அமைச்சர் ஜெயக்குமார் காரணம் காட்டியுள்ளார் என்று திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.

vannarapet-protest-02

வண்ணாரப்பேட்டை வன்முறைக்கு காரணம் தி.மு.க-வின் திண்டுக்கல் லியோனி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதற்கு திண்டுக்கல் லியோனி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த 12ம் தேதி வண்ணாரப்பேட்டையில் நடந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான பொதுக்கூட்டத்தில் நான்தான் தூண்டிவிட்டேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை மறுக்கிறேன். அந்த கூட்டத்தில் அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி அமர்ந்திருந்தனர். இந்த மண்ணிலிருந்து இஸ்லாமியர்களை பிரிக்க முடியாது. இந்திய மண்ணோடு கலந்தவர்கள் இஸ்லாமியர்கள். பிரதமர் மோடி கொடியேற்றும் செங்கோட்டை, உஸ்தாத் என்ற இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது.

vannarapet protest 01

பா.ஜ.க-வின் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்தது அ.தி.மு.க-தான். இது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். இந்த துரோகத்தை கண்டித்து தான் 12ம் தேதி நடந்த வண்ணாரப்பேட்டை கூட்டத்தில் பேசினேன். அதன்பிறகு நடந்தது தன்னெழுச்சியான போராட்டம். அமைச்சர் ஜெயக்குமார் எப்போதும் ஒரு விஷயத்தை சுலபமாக திசை திருப்பிவிடுவார். வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது பற்றி கேட்டதற்கு, திண்டுக்கல் லியோனி கூட்டத்தில் பேசியதுதான் காரணம் என்று தவறான தகவலை பதிவு செய்துள்ளார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வண்ணாரப்பேட்டையில் நடந்தது கொடூர ஜனநாயக தாக்குதல் அதற்கு பதில் சொல்வதற்கு வழியில்லாமல், திண்டுக்கல் லியோனி மீது பழியைப் போட்டு தூண்டிவிட்டதா சொல்கிறார். 

minister-jayakumar

அமைச்சர் ஜெயக்குமார் தங்களுடைய தவறுகளை மறைக்கும் செய்யும் முயற்சி என்று தெரிகிறது. அதனால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது போன்ற திசை திருப்பிட முயற்சியில் ஈடுபட வேண்டாம்.  இந்த குடியுரிமை சட்டம் அமல் படுத்தியதிலிருந்தே இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நான் தூண்டியதாக சொல்வது பொய்யான குற்றச்சாட்டு. அதோடு வன்முறையைத்  தூண்டுபவர்கள் மேல் வழக்கு தொடர்வோம் என்று  கூறியிருக்கிறார்கள். அப்படி என் மீது வழக்கு தொடர்ந்தாலும் அதை  சட்டரீதியாக சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.