டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகம் தாக்கப்பட்டதா? பா.ம.க விளக்கம்!

 

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகம் தாக்கப்பட்டதா? பா.ம.க விளக்கம்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தை பா.ம.க-வினர் தாக்கியதாக பரவும் தகவல் தவறானது என்று பா.ம.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிருமான கே.பாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

balu

“பாட்டாளி மக்கள் கட்சி குறித்து செய்தி வெளியிட்டதற்காக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் வினோபா பூபதி தலைமையில் பா.ம.க.வினர் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வன்முறையில் ஈடுபட்டதாக திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சில பத்திரிகையாளர் அமைப்புகளும் உண்மையறியாமல் இதே புகாரை கூறியிருக்கின்றன.

elango

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்டவை ஆகும். இவை ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

25.12.2019 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆறாவது பக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு குறித்து Anbumani Ramadoss has worst attendance among TN MPs  என்ற தலைப்பில் தவறான, ஒருதலைப்பட்சமான செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் கடந்த இரு கூட்டத்தொடர்களில் இரு விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டார் என்றும், ஒரு வினா கூட எழுப்பவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

raama

இந்த விவரங்கள் அனைத்தும் நாடாளுமன்ற மாநிலங்களவையின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த விவரங்கள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை. மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் மட்டும் புவிவெப்பமயமாதல், காவிரி – கோதாவரி இணைப்பு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, உயர்கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகிய நான்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசியுள்ளார். மருத்துவர் அன்புமணி  எழுப்பிய சில பிரச்சினைகளுக்காக அவரை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் பாராட்டியதுடன், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற அவரது கோரிக்கையை கவனத்தில் கொள்ளும்படி மத்திய அரசுக்கும் பரிந்துரைத்தார். அதுமட்டுமின்றி, 10 வினாக்களை அவர் எழுப்பியுள்ளார்.

anbu

இதுகுறித்த உண்மை நிலையை விளக்கும் நோக்கத்துடன் செய்தியாளரை பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராகிய வினோபா பூபதி நேற்று காலை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அந்த செய்தியாளர் செல்பேசி அழைப்புகளை ஏற்கவில்லை.

vino

அதைத்தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதைக் கேட்ட ஜெயா மேனன், மருத்துவர் அன்புமணி இராமதாசின் மாநிலங்களவை  செயல்பாடுகள் குறித்த விவரங்களுடன் தம்மை பிற்பகல் 2.30 மணிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சந்திக்கும்படி கூறியுள்ளார். அவரது அழைப்பின்படியே செய்தித்தொடர்பாளர் வினோபா,  பா.ம.க. நிர்வாகி கோபால் ஆகிய இருவரும் ஜெயா மேனனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உண்மை நிலவரத்தை விளக்கியுள்ளனர். அப்போது செய்தியாளர் பி. சிவக்குமாரும் உடன் இருந்திருக்கிறார்.

k

நாடாளுமன்ற இணையதளங்களில் இருந்து தான் மருத்துவர் அன்புமணி இராமதாசின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை எடுத்ததாக செய்தியில் செய்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நாடாளுமன்ற  இணையதளங்களில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய பிரச்சினைகள், வினாக்கள் ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் வினோபா பூபதி எடுத்துக்காட்டியதும் உடனடியாக தமது நிலையை மாற்றிக்கொண்ட அந்த செய்தியாளர், ஒரு தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தான் இத்தகவல்களை எடுத்து வெளியிட்டதாகக் கூறினார்.

anbu

அவர் எழுதிய செய்தி பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை. இதுதொடர்பாக ஜெயாமேனன், சிவக்குமார் ஆகியோருக்கும் வினோபா பூபதிக்கும் இடையே விவாதம் நடந்து கொண்டிருந்த போது, ஜெயாமேனனின் அறைக்குள் வந்த நாளிதழ் ஊழியர்கள் சிலர் வினோபா பூபதியை மிரட்டியதுடன், முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். அப்போது அவர்களை எச்சரித்த ஜெயாமேனன் அறையிலிருந்து வெளியேறும்படி ஆணையிட்டிருக்கிறார்

boo

. அதுமட்டுமின்றி தங்களின் செய்தியாளர் தரப்பில் தவறு இருப்பதாகவும், பா.ம.க. தரப்பில் விளக்கச் செய்தி கொடுத்தால் அதை விதிகளுக்கு உட்பட்டு பிரசுரிப்பதாகவும்  உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து வினோபா பூபதியும், கோபாலும் அவருக்கு நன்றி கூறி திரும்பினர். இதைத் தவிர டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வேறு எதுவும் நடைபெறவில்லை.
அவ்வாறு இருக்கும் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த பொருட்களை வாரி இறைத்து கலவரம் செய்ததாகவும், ஊழியர்களை மிரட்டியதாகவும் திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனும், சில பத்திரிகை அமைப்புகளின் நிர்வாகிகளும் எங்கிருந்து கண்டுபிடித்தனர் என்பது தெரியவில்லை.

tks

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் அவர்களும், வினோபா பூபதி அவர்களும் தான். இவர்கள் இருவரும் சொல்லாத ஒன்றை மற்ற அனைவரும் எப்படி துப்பறிந்தனர்?
டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்குள் பாட்டாளி மக்கள் கட்சியினர் நுழைந்திருந்தால் அங்கு இருந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுத்திருந்திருக்கலாம்; ஜெயா மேனன் அறையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையில் புகார் செய்திருக்கலாம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்கும் மேலாக இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் சில பத்திரிகை அமைப்புகளின் பெயர்களின் வெளியாகியுள்ள செய்திகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று அந்த நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் பா.ம.க.வுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார்.

dmk

இவ்வளவுக்குப் பிறகும் நடக்காத ஒன்றை வைத்து பா.ம.க  மீது பழிசுமத்துவோரின் நெஞ்சம் முழுவதும் நஞ்சும், வஞ்சமும் நிறைந்துள்ளன என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? உண்மை இவ்வாறு இருக்க ஊடக அறம், பத்திரிகையாளர் சுதந்திரம் குறித்த விஷயத்தில்  திமுகவோ, இல்லாத பத்திரிகையில் எழுதாத சிலர் தங்களின் செயல்களுக்கு கேடயமாக நடத்தும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ பா.ம.க.வுக்கு பாடம் நடத்த வேண்டியதில்லை; அதற்கு அவர்களுக்கு தகுதியுமில்லை.”