டெல்டா மாவட்டங்களுக்கு 4 கோடி ரூபாய் நிவாரண பொருட்கள்: மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

 

டெல்டா மாவட்டங்களுக்கு 4 கோடி ரூபாய் நிவாரண பொருட்கள்: மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து திரட்டப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை டெல்டா மாவட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

திருச்சி: திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து திரட்டப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை டெல்டா மாவட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடும் பொருட்டு, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து 100 லாரிகளில் நிவாரண பொருட்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

திருச்சி திமுக தலைமை அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த லாரிகளை, திமுக தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஸ்டாலின், “அரிசி, ரவை, கோதுமை, பிஸ்கட், பிரட், பருப்பு வகைகள், பால்பவுடர், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், மருந்துகள், துணிகள், மெழுகுவர்த்திகள் என 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 100 லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

புயலால் பாதிப்பு ஏற்பட்ட உடனே முதலமைச்சர் நேரடியாக சென்று நிவாரணப் பணிகளை முடுக்கிவிடவில்லை. 5 நாட்களுக்குப் பிறகு சென்று, 5 மணி நேரம் கூட முதலமைச்சர் ஆய்வு செய்யவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல், மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.