டிராகன் நாட்டிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இழுக்க மத்திய அரசு அதிரடி முடிவு

 

டிராகன் நாட்டிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இழுக்க மத்திய அரசு அதிரடி முடிவு

சர்வதேச அளவில் பொருளாதார சக்தியில் வல்லரசு நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அதேசமயம் பொருளாதார பலத்தில் புதிய சக்தியாக சீனா உருவெடுத்துள்ளது.

சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா பக்கம் இழுக்க பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதார சக்தியில் வல்லரசு நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அதேசமயம் பொருளாதார பலத்தில் புதிய சக்தியாக சீனா உருவெடுத்துள்ளது. சமீபகாலமாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே முட்டல் மோதல் இருந்து வருகிறது. இந்த சண்டையை ஆரம்பித்து வைத்ததே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தான்.

குறைந்த விலையில் அதிக அளவில் பொருட்கள் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருதினார். குறிப்பாக சீன இறக்குமதியால் அதிகம் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது. 

அமெரிக்கா-சீனா இடையிலான இந்த வர்த்தக போரால்  சீனாவில் தொழில் செய்து வந்த சர்வதேச நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அந்த நிறுவனங்கள் தற்போது தங்களது சீன கூடாரத்தை காலி செய்து வருகின்றன. அவ்வாறு வெளியே செல்லும் நிறுவனங்களை, முன்னுரிமை வரி விகிதம், வரி ஹாலிடே போன்ற சலுகைகளை வழங்குவதாக வியட்நாம் மற்றும் மலேசியா நாடுகள் தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றன.

தற்போது இந்தியாவும் சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை தன் பக்கம் இழுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இங்கு தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு நிதி சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் உபயோக பொருட்கள், மின்சார வாகனங்கள், காலணிகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்ற துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.