டிசம்பர் 11-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

 

டிசம்பர் 11-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி முதல் கூட்டுவதற்கு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வரை இரு அமர்வுகளாக நடைபெற்றது. இதையடுத்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜுலை 18-ம் தேதியன்று கூடியது. இந்த கூட்டதொடரானது ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெற்றது. அந்த கூட்டத்தொடரின் போது, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை கூட்டுவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை அளித்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதம் கூடும் குளிர் கால கூட்டதொடர் கடந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. தற்போதும், எதிர்வரவுள்ள ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு தாமதாக தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத் தொடரில், பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளதால் அதனை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் ரஃபேல் விமான ஒப்பந்தம் உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என தெரிகிறது.