டபுள் சென்சுரியை நெருங்கும் வெங்காயத்தின் விலை! அடுத்த வாரம் முதல் 35 ஆயிரம் டன் இறக்குமதி வெங்காயம் வருது

 

டபுள் சென்சுரியை நெருங்கும் வெங்காயத்தின் விலை! அடுத்த வாரம் முதல் 35 ஆயிரம் டன் இறக்குமதி வெங்காயம் வருது

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200-ஐ நெருங்கி விட்டது. இந்நிலையில் அடுத்த வாரம் முதல் குறைந்தபட்சம் 35 ஆயிரம் டன் இறக்குமதி வெங்காயம் வர உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்காயம் உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதிகளில் பெய்த எதிர்பாராத மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தன. இதனால் உற்பத்தி பாதித்தது. இந்த சீசனில் வெங்காய உற்பத்தி சுமார் 26 சதவீதம் குறைந்தது. இதனால் சப்ளையில் நெருக்கடி ஏற்பட்டு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தட்டுபாடு காரணமாக வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 

வெங்காய மண்டி

மத்திய நுகர்வேர் துறையின் அறிக்கையின்படி, நேற்று நாட்டில் அதிகபட்சமாக கோவாவின் பானாஜியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.165க்கு விற்பனையானது. அதேசமயம் நாட்டின் சில பகுதிகளில் வெங்காயத்தின் விலை ரூ.180ஐ தாண்டி விட்டதாக தகவல்கள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள வெங்காய மண்டிகள் உள்நாட்டு சாகுபடி செய்யப்பட்ட வெங்காய வரத்தை எதிர்பார்த்து உள்ளன.

சந்தையில் வெங்காய விற்பனை

இந்நிலையில், அடுத்த வாரம் முதல் குறைந்தபட்சம் 35 ஆயிரம் டன் இறக்குமதி வெங்காயத்தை மத்திய அரசு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதிக்கு ஆர்டர் கொடுத்த வெங்காயம் இந்தியாவுக்கு வந்து விட்டால் சப்ளை அதிகரித்து விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இறக்குமதி வெங்காயம் அடுத்த வாரம் முதல்தான் வரும் என்பதால் இன்னும் ஒரு வாரத்துக்கு வெங்காயத்தின் விலை குறையுமா என்பது சந்தேகம்தான்.