ஞானமும் முக்தியும் தரும் ஞானபிரசுன்னாம்பிகை

 

ஞானமும் முக்தியும் தரும் ஞானபிரசுன்னாம்பிகை

 ராகு,கேது கிரக தோஷம் நீக்கும் அற்புத திருத்தலம் ஸ்ரீ காளகஸ்தி ஆகும்.

சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்னையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்றவர்கள் வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில்ஆகும்.

kalaka

தல வரலாறு:

சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.

தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளி விடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளி விட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. இதனால் பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.

இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோயில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

kakalak

ஒருமுறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதேபோன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம்தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ்பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பெயர்க் காரணம்:

சீகாளத்தில் என்ற சொல்லில்,சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.

ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதிலிருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.

பாதாள விநாயகர்:

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோயில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றி விட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

kalakajalk

காலப்போக்கில் விநாயகர் கோயில் இருந்த பகுதியை விட,  அதை சுற்றியிருந்தப் பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோயில் பாதாளத்திற்கு போய்விட்டதால் இங்குள்ள விநாயகர் பாதாள விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.

கோயில் அமைப்பு:

கோயிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்பு நந்தி, வாயுலிங்கம்,  கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.

ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியைக் கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தைக் காணலாம்.

தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு,காற்று ஆகியவற்றுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கம். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

மூலவர், சுயம்பு, தீண்டாத்திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பின்னால் கட்டப்பட்டது.

சுவாமி மீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தப்பட்டுள்ளது. இக்கவசத்தைச் சார்த்தும்போதும், எடுக்கும்போதும்கூட சுவாமி மீது கரம் படக்கூடாது. இக்கவசத்தில் 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கவசத்தை எடுத்துப் பார்த்தால் இத்திருமேனியின் அற்புதமான அமைப்பைத் தரிசிக்கலாம்.

சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது. இதன் அடிபாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இரு தந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும், வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன..சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. 

சன்னதியில் மூலவர் பக்கத்தில் மனோன்மணி சக்தியின் திருமேனி உள்ளது. கீழே ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் போக மூர்த்தத் திருமேனி உள்ளது. சுகாசன அமைப்பில் உள்ள இம்மூர்த்தம் மான், மழு ஏந்தி அபயஹஸ்த, சிம்மகர்ண முத்திரைகளுடன் கூடிய நான்கு திருகரங்களுடன் அழகுற விளங்குகிறது.

 

kalakalakal

மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் எப்போதும் அசைந்து கொண்டு,வாயுத்தலம் இது என்பதை நிதர்சனமாகக் காட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு தொழுவோம். 

சன்னதியில் சிலைக்கை வேடர் பெருமானாகிய கண்ணப்பரின் மூலத் திருமேனி உள்ளது. கும்பிட்ட பயன் காண்பார் போலச் சிலைக்கை வேடர் பெருமானைக் கை தொழுதார்’ ஞானசம்பந்தர் என்பதை எண்ணி நாமும் வணங்குவோம்.

மூலவருக்கு எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன.கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சன்னதியில் திருநீறு தரும் மரபு இல்லையம். பச்சைக் கற்பூரத்தைப் பன்னீர் விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக் கொண்டு தரிசிப்போர்க்கு அத்தீர்த்தத்தையே தருகின்றனர். நாம் திருநீற்றுப் பொட்டலம் வாங்கித் தந்தால் அதை சுவாமி பாதத்தில் வைத்து எடுத்துத் தருகின்றனர்.

மூலவருக்குக் கங்கை நீரைத் தவிர வேறெதுவும் மேலே படக் கூடாது பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன.சுவாமிக்கு மேலே தாராபாத்திரம் உள்ளது.

இத்தலத்தில் உள்ள மற்றுமொரு சிறப்பு, இங்கு அர்த்தசாமப் பூஜை கிடையாது. சாயரட்சை பூஜையுடன் முடிவு. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை, பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டு போய் சேர்ப்பித்து விடுவார்கள்.

அம்பாள்-ஞானப்பூங்கோதையின் சன்னதி கிழக்கு நோக்கியது. அழகான கருவறை, கோஷ்ட மூர்த்தங்கள் எவையுமில்லை. அம்பாள் நின்ற திருக்கோலம் இரு திருக்கரங்கள்.திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேரு உள்ளது.

அம்பாள் இடுப்பில் ஒட்டியாணத்தில் ‘கேது’ உருவமுள்ளது. எதிரில் சிம்மம் உள்ளது. சன்னதிக்கு வெளியில் பிரகாரத்தில் தலைக்கு மேற்புறத்தில் ராசி சக்கரம் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது.

அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படுகிறது. சன்னதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமைதோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

அடுத்து வலமாக வரும்போது சித்திரகுப்தர்,எமன்,  தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன. எதிரில் சண்டேசுவரர் சன்னதி உள்ளது. இதற்குப் பக்கத்தில் அருமையான பெரிய ஸ்படிகலிங்கம் உள்ளது. இது ஸ்ரீ ஆதி சங்கரரின் பிரதிஷ்டை என்றும் சொல்லப்படுகிறது.

பக்கத்தில் சிலந்தி, யானை, பாம்பு, கண்ணப்பர் முதலிய திருவுருவங்கள் உள்ளன. இதன் பக்கத்தில் மாடிப்படிகள் உள்ளன. மேலேறிச் சென்றால் கண்ணப்பரைத் தரிசிக்கலாம். எல்லோருக்கும் இது அனுமதியில்லை என்பதால் இது பூட்டப்பட்டுள்ளது.

பிராகார வலத்தை முடித்துப் பழையபடியே தட்சிணாமூர்த்தியை வந்து தொழுது வெளியேறுகிறதாம். வரும்போது இடப்பால் மிருத்யுஞ்சலிங்க சன்னதி உள்ளது. வெளியில் வலப்பால் தலமரம், மகிழ மரம் உள்ளது.

காளியைத் தொழுதவாறே எதிரில் உள்ள கோபுரத்தைத் தாண்டி வெளியேறி, இடப்பக்கம் திரும்பி கைலாசகிரிக்குச் செல்லவேண்டும். இந்த மலை கண்ணப்பர் மலை என்று அழைக்கப்படுகிறது. ஏறிச் செல்ல நல்ல படிகள் உள்ளன. அதிக உயரமில்லை. மேலேறிச் சென்றால் சிறிய சிவலிங்கச் சன்னதியை தரிசிக்கலாம். கண்ணப்பர் சன்னதி உள்ளது. வில்லேந்தி நிற்கும் திருக்கோலம். மலைக்கிளுவை மரங்கள் இரண்டு சுவாமிக்கு முன்னால் மலையில் உள்ளன.

இம்மலையிலிருந்து பார்த்தால் ஊரின்தோற்றம் நன்கு தெரிகிறது. அவ்வாறு பார்க்கும்போது நேரே தெரிவது துர்க்கை மலைக்கோயில் வலது பக்கம் தெரிவது முருகன் மலைக்கோயில். இந்த மலை கைலாசகிரி எனப்படுகிறது. கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம். இம்மலை 25  ஏக்கர்  பரப்புடையது. இங்கு காட்டில் பல இடங்களில் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பரின் திருவுருவங்களும் உள்ளன.

மலைப்படிகளேறும் போதே திரும்பிப் பார்த்தால் 2 கி.மீ தொலைவில் பரத்வாஜ தீர்த்தம் – குளம் நன்கு தெரியும். கரையில் மகரிஷி தவம் புரிந்த கோயில் உள்ளது. சிவலிங்கத்திருமேனியும், பரத்வாஜ மகரிஷியின் திருவுருவமும் கோயிலில் உள்ளன. 

இவ்விடத்தை லோபாய் தீர்த்தம் என்று வழங்குகின்றனர். இன்னும் சற்று தூரத்தில் மலையடி வாரத்தில் நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. ஓரிடத்தில் மயூரி தீர்த்தமொன்றும் உள்ளது. 16 ஏக்கர்.தொலைவில் உள்ள ஒரு சோலையில் சஹஸ்ர ராமலிங்கம் என்னும் கோயிலும் உள்ளது. 
இங்ஙனம் பெயருக்கேற்ப கைலாசகிரி பல கோயில்களையும், தீர்த்தங்களையும் பெற்று திகழ்கிறது.

lakahjkdj

பொங்கல் விழாவில் ஒரு நாளிலும் பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டின் இரு நாட்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார். அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வார்களாம். இந்த வலம் காலை தொடங்கி மறுநாள் முடிவுறுமாம். சுவாமியின் திருக்கல்யாண விழாவின்போது பொது மக்கள் திரளாகக் கூடத் தத்தம் திருமணங்களைச் சன்னதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்திலும் உள்ளது.

தட்சிண கைலாசம், அகண்ட வில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிரவேசிப்பதே முக்தி எனப்படுகிறது. “ஸ்ரீ காளத்தி பிரவேச முத்தி” என்கின்றனர். இங்கு நதி – பர்வதம் என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி – பொன்முகலியாற்றைக் குறிக்கும். அழியாச் செல்வமான இறைவியும் இறைவனும். பர்வதம் – கைலாசகிரி, இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனச் சொல்லப்படுகிறது. பொன்முகலி உத்திரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது பண்டைய விசேஷமாகும். பண்டை நாளில் ரிஷிகள் பொன்முகலியில் நீராடி கிழக்கு நோக்கித் தரிசிக்க அவர்களுக்கு காட்சி தரவே சுவாமி மேற்கு நோக்கினார் என்ற கருத்து சொல்லப்படுகிறது.

தோஷங்கள் விலக பரிகார பூஜை:

ஸ்ரீகாளஹஸ்தி,காளஹஸ்தீஸ்வரர் கோயில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து, பிரச்னையில் இருந்து விடுபடுகின்றனர்.

தினமும் காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதற்காக கோயில் தேவஸ்தான அலுவலகத்தில் ரூ.250, ரூ.500, ரூ.1000, ரூ.1,500-க்கு அனுமதிச் சீட்டு விற்பனை செய்கிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படும். இதில் ஒரு அனுமதிச் சீட்டு வாங்கினாலே போதுமானது, பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தையும் கோயிலில் கொடுத்து விடுகிறார்கள். ஒரு அனுமதிச் சீட்டுக்கு 2 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். சில சமயங்களில் பூஜையின் போது 200 பேர் வரை கலந்து கொள்ளலாம். 45 நிமிடம் இந்த பூஜை நடைபெறும்.

ரூ 1,500 கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்குபவர்களுக்கு கோயில் உள் பிரகாரத்தில் தனியாக தோஷ பூஜை செய்கிறார்கள். இதில் தம்பதியர் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு சிறப்பு தரிசனம், ஆசீர்வாத தரிசனம் இலவசம். பூஜைக்கு செல்பவர்கள் தாமரைப்பூ, வில்வ இலை வாங்கி செல்வது நல்லது. இதற்காக கோவிலில் ஆங்காங்கே இந்த பொருட்களை விற்பவர்கள் உள்ளனர். ரூ.20  கொடுத்தால் பை நிறைய இந்த பொருட்கள் கொடுக்கிறார்கள். இந்த பூஜை செய்பவர்கள் அன்று இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி செல்வது நல்லது.

இறைவன் – ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்.

இறைவி – ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை.

தலமரம் – மகிழம்.

தலமரம் – ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு.

இருப்பிடம் :

ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னைக்கு செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது.