‘ஜோடிக்கப்பட்ட நேர்காணலால் மக்களை ஏமாற்ற முயற்சி’ – மோடியை விளாசும் காங்கிரஸ்

 

‘ஜோடிக்கப்பட்ட நேர்காணலால் மக்களை ஏமாற்ற முயற்சி’ – மோடியை விளாசும் காங்கிரஸ்

ஜோடிக்கப்பட்ட நேர்காணல் மூலம் நாட்டு மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி: ஜோடிக்கப்பட்ட நேர்காணல் மூலம் நாட்டு மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

புதிய ஆண்டின் முதல் நாளான நேற்று, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி சிறப்பு நேர்காணல் வழங்கியிருந்தார். அப்போது, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல்(சர்ஜிகல் ஸ்டிரைக்), ராமர் கோயில் விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருந்தார்.

செய்தியாளர்களை மோடி சந்திப்பதில்லை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை போன்ற மோடி மீதான குற்றச்சாட்டுகளுக்கு இந்த நேர்காணல் பதில் அளிக்கும் என பாஜகவினர் கருதினர். 

இந்நிலையில், இந்த நேர்காணல் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, “மோடி, அவர் அளித்த 10 வாக்குறுதிகளைப் பற்றி பேசியிருக்கவேண்டும். வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய், 80 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவருதல், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, ஜி.எஸ்.டி, தேசியப் பாதுகாப்பு, ஊழல், ரஃபேல் விவகாரம், கங்கா நதியை தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பதிலளித்திருக்கவேண்டும்.

ஆனால், அவருடைய நேர்காணல் முழுவதும் நான், நான் என்ற கோணத்தில் தான் இருந்தது. உங்களுடைய நான் என்ற மனப்பான்மையும் பொய்யும்தான், இந்தியப் பொருளாதாரத்தையும் அழித்தது. ஜோடிக்கப்பட்ட நேர்காணல் மூலம் நாட்டின் மக்களை ஏமாற்ற முடியாது” என கடுமையாக விமர்சித்துள்ளார். 

மேலும், பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் நாடாளுமன்றம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பை எதிர்கொள்ள வேண்டும் என்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மோடி அரசியலாக்குவது தேசிய அவமானம் என்றும் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.