‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ – அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ – அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் நாயகனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்நாள் நட்சத்திர வீரர் தோனி தேர்வாகியுள்ளதையடுத்து, அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை முதன் முறையாக வென்று, இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 

dhoni

இந்த சாதனைக்கு, ஒரு மனிதனின் உழைப்பு சத்தமில்லாமல் இருந்துள்ளது. கிரிக்கெட் என்பது ஒரு குழுவின் விளையாட்டு, தனி நபர் விளையாட்டு அல்ல என்பது நாம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், சில தனி மனிதர்களால் ஆட்டத்தின் போக்கு முற்றிலுமாக மாறிவிடுவதையும் நம்மால் தவிர்க்க முடியாது. ஏனெனில், சச்சின் தன் விக்கெட்டை இழந்ததும், தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு, அடுத்த வேலையை பார்க்கப் போய்விடும் அளவிற்கான ரசிகர்கள் இருந்த நாடு இந்தியா. 

இங்கு திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பதை விட, சரியான நேரத்தில் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயங்களே அதிகம்.

dhoni

உதாரணமாக, கடந்த 2018ல் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஒரு சரைசதம் கூட அடிக்காத தோனி மீது பல்வேறு விமர்சனங்கள் வாரி இறைக்கப்பட்டது. வன்மங்கள் வீசப்பட்டன. அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்ற கூக்குரல்கள் எழத் தொடங்கின.

அதை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 2019 தொடங்கியவுடன், முதல் தொடரிலேயே மூன்று அரை சதங்களை விலாசி, ‘தொடரின் நாயகன்’ என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் தோனி. 

அவரின் இந்த அதிரடிகள் அனைத்திற்கும் பின்னணியில், பல வசைச் சொற்களும், வன்மங்களும் நிறைந்திருக்க கூடும். அது அனைத்திற்கும் தன் பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார் தோனி. இதை சாமானியனுக்கும் புரியும் படியாக, வடசென்னை திரைப்படத்தில் தனுஷ் பேசும், ‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ வசனத்துடன் உற்சாகத்தில் பகிர்ந்துவருகின்றனர், அவரது ரசிகர்கள்.