ஜெயலிதாவுக்கு முறையற்ற சிகிச்சை அளிக்கப்பட்டதா? அப்போலோ நிர்வாகம் விளக்கம்!

 

ஜெயலிதாவுக்கு முறையற்ற சிகிச்சை அளிக்கப்பட்டதா? அப்போலோ நிர்வாகம் விளக்கம்!

முறையற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துவது அடிப்படை ஆதாரமற்றது என்று அப்போலோ நிர்வாகம் கூறியுள்ளது.

சென்னை: முறையற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துவது அடிப்படை ஆதாரமற்றது என்று அப்போலோ நிர்வாகம் கூறியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் ஆகியோரைப் பிரதிவாதிகளாக சேர்க்கக்கோரி ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது கபருல்லா கான் ஆணையத்தின் முன் கடந்த 27ஆம் தேதி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அப்போலோ தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

jayalalitha

 

இது குறித்து அப்போலோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்ற காலத்தில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்படவில்லை. எந்த விதமான அறுவை சிகிச்சையும் தேவையில்லை என எய்ம்ஸ் மருத்துவர்களும் உறுதி செய்தனர். மூன்று மருத்துவர்கள் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க பரிந்துரைத்ததாக கூறப்படுவது தவறு. ஒரே ஒரு மருத்துவர்தான், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் முழு சிகிச்சை குறித்து முழுமையாக ஆராயாமல் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பரிந்துரைத்தார். ஒரே ஒரு மருத்துவரின் அறிவுரைப்படி ஆஞ்சியோ சிகிச்சை அளிப்பது சரியல்ல என அனைத்து மருத்துவர்களும் கருதினர்.

எக்மோ கருவி பொருத்தும்போது ஸ்டெர்னோடோமி செய்யப்பட்டபோது, சிபிஆர் எனப்படும் உயிர்க்காக்கும் அவசர நடைமுறைகள் 15 நிமிடங்களுக்குச் செய்யப்படவில்லை என ஆணைய வழக்கறிஞர் கூறியிருப்பது முற்றிலும் தவறானது. வாக்குமூலத்தின் போது மருத்துவர் மதன்குமார் விநாடிகள் என கூறியது நிமிடங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் ஆணையத்தின் தவறை உடனே சுட்டிக்காட்டியும் அது சரிசெய்யப்படவில்லை. எனினும் அடுத்த வரியிலேயே மருத்துவர் மதன்குமார் 15 விநாடிகள் என கூறியிருக்கிறார். இது ஆணையத்தின் பதிவுகளில் இடம்பெற்றிருந்தாலும், அதை ஆணையத்தின் வழக்கறிஞர் தமது மனுவில் குறிப்பிட தவறிவிட்டார்.

arumugasamy

தவறான பதிவு மற்றும் சரியான புரிதல் இல்லாததால் மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் மிக மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அப்போலோ குறிப்பிட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டபோது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறையிலிருந்து எவ்விதத்திலும் மாறவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டதுபோல் மூளைச்சாவு ஏற்படவில்லை என்பதை நிரூபிப்பதற்கு போதிய மருத்துவ ஆதாரங்கள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அப்போலோ கூறியுள்ளது

ஆங்கில மருத்துவச் சொற்கள் தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் உண்மை சிதைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் இருந்ததாகவும், இதில் கூட்டுச்சதி என்றும் முறையற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் குற்றம் சுமத்துவது அடிப்படை ஆதாரமற்றது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய உரிய தகுதிவாய்ந்த மருத்துவகுழு அமைக்கப்படவேண்டும் என்ற தங்களது வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ஆணையத்தின் மனு உள்ளது.’ இவ்வாறு அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.