ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

 

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து எதிரான போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ப்ளாம்போன்டைன்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து எதிரான போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் இலங்கையை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது லீக் போட்டியில் ஜப்பானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக எளிதாக தோற்கடித்தது. இந்நிலையில், மூன்றாவது லீக் போட்டியில் நியூசிலாந்தை நேற்று எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யன்ஷ் சக்சேனா களமிறங்கினர். இருவரும் நிதானமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்தனர். போட்டியில் 23 ஓவர் முடிந்தபோது மழை குறுக்கிட்டதால் பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த ஓவர் வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், திவ்யன்ஷ் சக்சேனா 52 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லூவிஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 23 ஓவரில் 192 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.

நியூசிலாந்து அணி 21 ஓவரில் 147 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. வருகிற 28-ம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.