ஜியோ மூலம் 3 வாரத்தில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் திரட்டிய முகேஷ் அம்பானி… ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கடன் சுமையை குறைக்க உதவும்…

 

ஜியோ மூலம் 3 வாரத்தில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் திரட்டிய முகேஷ் அம்பானி… ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கடன் சுமையை குறைக்க உதவும்…

முகேஷ் அம்பானி ஜியோ பங்கு விற்பனை வாயிலாக மூன்றே வாரத்தில் சுமார் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் திரட்டியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மொத்த கடன் சுமையில் கணிசமான அளவை குறைக்க இந்த பணம் உதவும்.

நாட்டின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோலிய வர்த்தகம் முதல் தொலைத்தொடர்பு சேவை என பல்வேறு துறைகளில் கொடி கட்டி பறக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடன் உள்ளது. 2021 மார்ச் மாதத்துக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனம் என்ற நிலையை எட்டும் என 2019 ஆகஸ்டில் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார்.

ஜியோ

மேலும் அதற்கான நடவடிக்கையிலும் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கியது. முதலில் தனது எண்ணெய் வர்த்தகத்தில் கணிசமான பங்குகளை சவுதியின் அரோம்கோ நிறுவனத்துக்கு விற்பனை செய்து பணத்தை திரட்டும் நடவடிக்கையில் இறங்கியது. இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே இது தொடர்பான ஒப்பந்தம் முடிவான நிலையில் ஒரு சில காரணங்களால் அது தாமதமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனத்துக்கு ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43,547 கோடிக்கு விற்பனை செய்தார். 

பேஸ்புக் ஜியோ

இதனையடுத்து அண்மையில் சில்வர் லேக் நிறுவனம் ஜியோவின் 1.15 சதவீத பங்குகளை ரூ.5,665.75 கோடி வாங்கியது. இந்த ஒப்பந்தம் நடந்து முடிந்த ஒரு சில தினங்களில் தனியார் பங்கு முதலீ்ட்டு நிறுவனமான விஸ்தாவுக்கு ஜியோவின் 2.3 சதவீத பங்குகளை ரூ.11,367 கோடிக்கு விற்பனை செய்வதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. இந்த 3 ஜியோ பங்கு விற்பனை நடவடிக்கைகளும் கடந்த 3 வாரங்களுக்குள் வேகமாக நடந்து முடிந்துள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.60,596.37 கோடி கிடைக்கும். இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கடனை குறைக்க உதவும். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லா நிறுவனமாக மாறுவதற்காக வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளது.