ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய துடிக்கும் பேஸ்புக்…..சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் முகேஷ் அம்பானி….

 

ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய துடிக்கும் பேஸ்புக்…..சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் முகேஷ் அம்பானி….

முகேஷ் அம்பானியின் தகவல்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் 10 சதவீத பங்குகளை வாங்க பேஸ்புக் நிறுவனம் ஆர்வமாக உள்ளது. அதேசமயம் முகேஷ் அம்பானியும் பங்குகளை விற்பனை செய்யும் விருப்பமாக உள்ளார்.

நம் நாட்டின் தகவல்தொடர்பு துறையின் வரலாற்றை மாற்றி எழுதிய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றை ஜி.மு. (ஜியோ வருகைக்கு முன்), ஜி.பி. (ஜியோ வருகைக்கு பின்) என இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம். ஜியோவின் வருகைக்கு பிறகு இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்தது, அழைப்பு கட்டணங்கள் கிட்டத்தட்ட இலவசம் என்ற நிலைக்கு சென்றது. ஜியோவின் வருகையால் பல சின்ன நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்துக்கு மூடுவிழா நடத்தின. ஜியோவின் போட்டியை சமாளித்து தற்போது ஏர்டெல், வோடோபோன் ஐடியா மற்றும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஆகியவை மட்டுமே தொலைத்தொடர்பு துறையில் காலத்தை தள்ளி வருகின்றன.

ஜியோ

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் ஏற்கனவே இன்ஸ்டகிராம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களை வளைத்து போட்டுள்ளார். தற்போது ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை பேஸ்புக் முடிவு செய்துள்ளது. முகேஷ் அம்பானியும் பங்குகளை விற்பனை செய்ய ரெடியாக உள்ளார்.

பேஸ்புக்

ஆனால் கொரோனா வைரஸ்தான் இந்த பங்கு விற்பனைக்கு தடையாக உள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பயணத்துக்கு தடை விதித்துள்ளதே இதற்கு காரணம். பயண தடையால் இரு தரப்பினரும் சந்தித்து பங்கு விற்பனை செய்வது தொடர்பாக பேச முடியாமல் உள்ளனர். இல்லையென்றால் பங்கு விற்பனையை இந்நேரம் முடிந்து இருக்கும் என தகவல். அதேசமயம் இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய செய்திதொடர்பாளரிடம் டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் கேள்வி கேட்டு இருந்தது. ஆனால் அவர் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.