ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்…..

 

ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்…..

ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கை அந்நிறுவனம் நீக்கியது.

டெல்லியில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னதாக அதனை பேஸ்புக்கில் லைவ் ஒளிபரப்பு செய்தார். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

துப்பாக்கி சூடு நடத்தியவர்

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் கூறியிருப்பதாவது: இது போன்ற வன்முறை சம்பவங்களுக்கு பேஸ்புக்கில் இடம் இல்லை. நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கை நீக்கி விட்டோம். மேலும், துப்பாக்கி சூடு நடத்தியவரை, துப்பாக்கி சூட்டை புகழ்ந்து, ஆதரிக்கும், முன்னிலைபபடுத்தும் எந்வொரு உள்ளடக்கத்தையும் அடையாளம் கண்டவுடன் நீக்கி வருகிறோம். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரண்டு மசூதிகளில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்ப பேஸ்புக் தளத்தை பயங்கரவாதிகள் பயன்படுத்தினர். தற்போது அதே மாதிரி  உத்தர பிரதேச இளைஞர் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டை லைவ்வாக ஒளிபரப்ப பேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தியுள்ளார்.