ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திடீர் வாபஸ்

 

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திடீர் வாபஸ்

பாதுகாப்பு படை வீரர்களின் மீதான தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது

காஷ்மீர்: பாதுகாப்பு படை வீரர்களின் மீதான தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் கானி பாட், பிலால் லோன், ஹசிம் குரோஷி, ஷபிர் ஷா ஆகிய 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென திரும்பப் பெற்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில், ” பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து பாதுகாப்பும், வாகனங்களும் பிப்ரவரி 17-ம் தேதி (இன்று) மாலைக்குள் திரும்பப் பெற வேண்டும். எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரில் உள்ள சிலர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமும், தீவிரவாத அமைப்புகளிடமும் தொடர்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கான பாதுகாப்பை திரும்பப் பெறுவோம் என தெரிவித்திருந்தார்.