ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

 

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் உள்ள 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

யோகாஹாமா: ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் உள்ள 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2236 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 118 பேர் உயிரிழந்து உள்ளனர். ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் இருந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் காரணமாக 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என 3,711 பேருடன் அந்த கப்பல் ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டது.

ttn

இந்த நிலையில், கப்பலில் இருந்த 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்களை கப்பலில் இருந்து வெளியேற நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் நேற்று கப்பலில் இருந்து வெளியேறத் தொடங்கினர். மேலும் நேற்று சுமார் 500 பேர் மட்டுமே வெளியேறினார்கள். மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பொறுத்து அனைத்து பயணிகளும் வெளியேற இன்னும் மூன்று நாட்கள் வரை ஆகலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சொகுசுக் கப்பலில் உள்ளவர்களில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தக் கப்பலில் மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.