ஜனவரி 8-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

 

ஜனவரி 8-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை வருகிற 8-ம் தேதி வரை நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை வருகிற 8-ம் தேதி வரை நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி மாதம் 2-ம் தேதி (இன்று) கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியது.

நடப்பாண்டில் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரையில், கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். திருவாரூர் தவிர மற்ற பகுதிகளில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

முன்னதாக, ஆளுநர் நிகழ்த்திய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி, மேகேதாட்டு பிரச்னையில் மாநில அரசின் மெத்தனப் போக்கு உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்ததாகக் குறிப்பிட்டார்.

ஆளுநர் உரை நிறைவடைந்ததையடுத்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் தொடங்கியது. முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களும், திமுக சார்பில் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை வருகிற 8-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜனவரி 4,5,7-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது