சௌதி அரேபியாவில் கொத்தடிமையாக மகள்… இறந்துவிட்டதாக உடலை மாற்றிக்கொடுத்த கொடூரம்… சட்ட போராட்டம் நடத்தும் பெற்றோர்

 

சௌதி அரேபியாவில் கொத்தடிமையாக மகள்… இறந்துவிட்டதாக உடலை மாற்றிக்கொடுத்த கொடூரம்… சட்ட போராட்டம் நடத்தும் பெற்றோர்

சௌதி அரேபியாவில் தன்னுடைய மகள் கொத்தடிமையாக இருக்கிறாள், அவளை மீட்க வேண்டும் என்று தஞ்சையைச் சேர்ந்த பெற்றோர் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை பிலோமினா நகரைச் சேர்ந்தவர்கள் அந்தோணி யாகப்பா, பவுலின் மார்த்தாள். இவர்களது மகள் இமாக்குலேட் பல ஆண்டுகளுக்கு முன்பு சௌதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். கம்ப்யூட்டர் வேலை என்று சென்ற இமாக்குலேட்டை வீட்டு வேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

சௌதி அரேபியாவில் தன்னுடைய மகள் கொத்தடிமையாக இருக்கிறாள், அவளை மீட்க வேண்டும் என்று தஞ்சையைச் சேர்ந்த பெற்றோர் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை பிலோமினா நகரைச் சேர்ந்தவர்கள் அந்தோணி யாகப்பா, பவுலின் மார்த்தாள். இவர்களது மகள் இமாக்குலேட் பல ஆண்டுகளுக்கு முன்பு சௌதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். கம்ப்யூட்டர் வேலை என்று சென்ற இமாக்குலேட்டை வீட்டு வேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். திடீரென்று அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறியுள்ளனர். ஆனால், வீடியோ ஒன்றில் அந்த பெண் சௌதி அரேபியாவில் கொத்தடிமையாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அவரை மீட்டுத் தர வேண்டும் என்று வெளியுறவு, உள்துறை அமைச்சகத்திடம் மனு கொடுத்துவிட்டு காத்திருக்கின்றனர்.

immaculate

இது குறித்து அவர்கள் கூறுகையில், “எங்கள் மகள் இமாக்குலேட் கம்ப்யூட்டர் பிரிவில் பட்டம் பெற்றார். 2012ம் ஆண்டு சௌதி அரேபியாவுக்கு கம்ப்யூட்டர் தொடர்பான வேலை என்று சென்றார். அய்யம்பேட்டையில் டிராவல்ஸ் நடத்திவரும் புஹாரி என்பவர்தான் இமாக்குலேட்டை அனுப்பிவைத்தார்.
அங்கே நிறைய கட்டுப்பாடுகள், போன் வைத்திருக்கக் கூடாது என்று கூறி வீட்டு உரிமையாளர் போனில் இருந்து பேசுவார். 2013ம் ஆண்டு திடீரென்று, “எனக்கு இங்கு கம்ப்யூட்டர் தொடர்பான வேலை கொடுக்கவில்லை. வீட்டு வேலை செய்யச் சொல்லி கொடுமை செய்கிறார்கள். என்னை எப்படியாவது இந்தியாவுக்கு கூட்டிச்செல்லுங்கள்” என்று கூறி அழுதுள்ளார். இது குறித்து ஏஜெண்ட்டிடம் பேசினோம். அவர் பார்க்கலாம் என்ற வகையில் பதில் அளித்தார். அவரை நம்பி நாங்கள் காத்திருந்தோம்.
2013 மே மாதம் 21ம் தேதி எங்கள் மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், தூதரகத்தில் பேசி உடலை எடுத்துச் செல்லும்படியும் வீட்டு உரிமையாளர் கூறினார். வீட்டு உரிமையாளர், தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. வீட்டு உரிமையாளர் தன்னுடைய மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். பிறகு, கலெக்டர், தமிழக முதல்வர், பிரதமர் என்று பலரிடமும் மனு கொடுத்து காத்திருந்தோம். மகளின் உடலைக் கூட காண முடியாதோ என்று வேதனையிலிருந்தோம்.
கடைசியில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உடலை மீட்டோம். 2013 மே மாதம் இறந்ததாக கூறப்பட்டது. அவளது உடலை 2014 ஜனவரியில் தான் சட்ட போராட்டத்துக்குப் பிறகு பெற முடிந்தது.
சவப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது எங்களுக்கு அதிர்ச்சி. அது எங்கள் மகள் இல்லை. ஆனால், யாரும் எங்கள் பேச்சை நம்பவில்லை. மகள் போன துக்கத்தில் அவ்வாறு கூறுகிறோம் என்றே கருதினர். அது எங்கள் மகள் இல்லை, எங்கள் மகளை மீட்டுத் தர வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டது. டி.என்.ஏ பரிசோதனையில் அது எங்கள் மகள்தான் என்று எட்டு மாதம் கழித்து கூறினார்கள். சரி நமக்குத்தான் பெற்ற பாசத்தில் மகள் போல தெரியவில்லையோ என்று நினைத்து அரை மனதோடு அந்த உடலைப் பெற்று அடக்கம் செய்தோம்.

immaculate

இந்த நிலையில்தான், கடந்த ஜனவரி மாதம் சௌதி அரேபியாவில் கொத்தடிமைகளாக உள்ள 23 பெண்கள் என்று செய்தி வந்தது. அதில், எங்கள் மகள் இமாக்குலேட்டும் இருந்தாள். உடனே, உள்துறை, வெளியுறவுத் துறை, பிரதமர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு அளித்தோம். 11 மாதங்கள் முடிந்துவிட்டது ஒரு பலனும் இல்லை. தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எங்கள் பெண்ணை மட்டுமல்ல அந்த 23 பெண்களையும் மீட்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். எப்போது அவர்களுக்கு விடிவு பிறக்குமோ” என்றனர்.
உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக நிரூபித்துள்ளனர் என்றே தோன்றுகிறது. குறைந்தபட்சம் கொத்தடிமைகளாக சிக்கியுள்ள அந்த 23 பெண்களை மீட்கவாவது மத்திய மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வைரலாக பரவினால் மட்டுமே நடவடிக்கை எடுப்பேன் என்று இல்லாமல், இதுபோன்ற ஏழைகளுக்கும் உதவ அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.