சொன்னா நம்புங்க.. பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை விற்க மாட்டோம்… நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

 

சொன்னா நம்புங்க.. பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை விற்க மாட்டோம்… நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை விற்பனை செய்ய மாட்டோம். அதற்கு பதிலாக அந்நிறுவனங்களை மறுமலர்ச்சிக்காக திட்டமிட்டுள்ளோம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

தொலைத்தொடர்பு துறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் இந்த நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் அந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யமாட்டோம் என்று சொன்னதுடன், அந்நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் அளித்தது.

எம்.டி.என்.எல்.

இந்நிலையில், ஏர் இந்தியா, பி.பி.சி.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கபடுமோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில், பி.எஸ்.என்.எல்.மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் தொடர்பாக உறுப்பினர்கள்  எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது:

மத்திய இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே

பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை விற்பனை அல்லது பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. 23.10.2019 அன்று அந்நிறுவனங்களின் மறுமலர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை சேர்ந்த  78,569  பணியாளர்கள் மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனத்தை சேர்ந்த 14,387 பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமையால் தற்போதுள்ள பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தாமதமாகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.