சொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்கள்… பாதுகாப்பாக கன்னியாகுமரியில் இறக்கிவிட்ட போலீஸ்!

சொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்கள்… பாதுகாப்பாக கன்னியாகுமரியில் இறக்கிவிட்ட போலீஸ்!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வாழ வழியில்லை என்று கருதி இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு புறப்பட்ட 30க்கும் மேற்பட்ட ராஜஸ்தான் மாநில தொழிலாளர்களை போலீசார் மீண்டும் கன்னியாகுமரியில் இறக்கிவிட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் சுற்றுலா தொழிலை நம்பி ஏராளமான வெளிமாநில மக்கள் வசித்து வருகின்றனர். அந்த வகையில் குல்ஃபி உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தொழிலை 20-க்கும் மேற்பட்டவர்கள் செய்து வந்தனர். கடந்த மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சமாளித்துக்கொண்டு கன்னியாகுமரியிலேயே இவர்கள் வாழ்ந்து வந்தனர்.

north-india-workerd

தற்போது ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் கூட நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியாகவே இவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தனர். இதற்காக, மொத்தம் 36 பேர் இருசக்கர வாகனங்களில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டனர். குழந்தை குட்டிகளோடு அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை தாண்டி நெல்லை மாவட்டத்துக்குள் நுழைந்த இவர்களை போலீசார் சுற்றிவளைத்து விசாரித்தனர்.
உண்மை தெரிந்தபிறகு அவர்கள் அனைவரும் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு கயத்தாறு போலீசார் உணவும், மாஸ்க்கும் வழங்கினர். ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
நெல்லை டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் அவர்கள் அனைவரும் மீண்டும் கன்னியாகுமரிக்கு வேன் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்திடம் கூறி உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸ் பாதுகாப்போடு அவர்கள் கன்னியாகுமரிக்கு அழைத்து செல்லப்பட்டது வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.