செல்ஃபோனில் மூழ்கி கிடக்கும் பெற்றோர்களே….. எமிலை கவனியுங்கள்

 

செல்ஃபோனில் மூழ்கி கிடக்கும் பெற்றோர்களே….. எமிலை கவனியுங்கள்

ஹம்பர்க்: செல்ஃபோனில் மூழ்கி கிடக்கும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவன் ஒருவன் பேரணி நடத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுவன் எமில் ரஸ்டிக்கு 7 வயது ஆகிறது. இன்றைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் சிறுவர்களை போலவே பெரியோர்களும் மணிக்கணக்காக செல்ஃபோனில் மூழ்கி கிடப்பது வாடிக்கையாகிவிட்டது. அதற்கு எமிலின் பெற்றோர்களும் விதிவிலக்கல்ல. 

பெற்றோர்களின் அரவணைப்பிற்காக குழந்தைகள் ஏங்கும் வயதில் அவர்களுடன் தங்களின் நேரத்தை வெலவிட வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் நினைப்பதே இல்லை.  அவர்களுக்கும் சேர்த்தே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கருதிய சிறுவன் எமில், தன் பெற்றோர்களின் உதவியோடு செல்ஃபோனுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்றை நடத்தியுள்ளான்.

“செல்போனில் விளையாடாதீர்கள். அதற்குப் பதிலாக என்னுடன் விளையாடுங்கள்!” என்ற முழக்கத்துடன் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற அந்த பேரணியில் எமிலுடன் சேர்ந்து 150 சிறுவர்கள் கலந்துகொண்டனர். 

இந்த பேரணிக்குப் பின் ஜெர்மனியின் பல்வேறு ஊடகங்களும், நாளேடுகளும் எமிலை ஹீரோவாகவே சித்தரித்துவிட்டன. ஆனால் எமில் போன்ற சிறுவர்களுக்கு தேவை அதுவல்ல, பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் தான் என்பதை உலகமும், உலகத்தில் உள்ள பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.