செயற்கை மழை வரவழைத்து தாமரையை மலர செய்வோம்: கள்ள ஒட்டு போடுவீர்களா தமிழிசை? நெட்டீசன்கள் கேள்வி

 

செயற்கை மழை வரவழைத்து தாமரையை மலர செய்வோம்: கள்ள ஒட்டு போடுவீர்களா தமிழிசை? நெட்டீசன்கள் கேள்வி

செயற்கை மழை வரவழைத்தாலும் தமிழகத்தில் தாமரையை மலர செய்வோம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை பேசியுள்ளது விவாத பொருளாக மாறியுள்ளது

சென்னை: செயற்கை மழை வரவழைத்தாலும் தமிழகத்தில் தாமரையை மலர செய்வோம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை பேசியுள்ளது விவாத பொருளாக மாறியுள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் தோழமைக்கட்சிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக எந்த குட்டிக்கரணம் போட்டாலும் அந்த கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார். மேலும், “தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் தாமரை மலரும்?. இங்க `புல்’லே வளரவில்லை. ‘புல்’லுக்கே வக்கில்ல. தாமரை மலர்ந்து விடுமா” என்றும் ஆவேசமாக ஸ்டாலின் பேசினார்.

stalin

இதையடுத்து, ஸ்டாலின் பேசி முடித்ததும் மழை வந்து விட்டது. அப்படி மழை வரவே இல்லையென்றாலும், தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், அதில் சிறந்து விளங்கும் மோடி அரசு, செயற்கை மழை வரவழைத்தாலும் தமிழகத்தில் தாமரையை மலர செய்யும் என்றார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும்.செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தா கிலும் குளங்களை நிரம்ப வைத்து    தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்” எனவும் பதிவிட்டுள்ளார்.

தமிழிசையின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள ஸ்டாலின், தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்! என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், செயற்கை மழை வரவழைத்தாலும் தமிழகத்தில் தாமரையை மலர செய்வோம் என்ற தமிழிசையின் பேச்சு சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. நேர்வழியாக இயற்கையாக எதையும் பாஜக அரசு செய்யாதா? எப்போதுமே குறுக்கு வழியில் செயற்கை முறையில் தான் அக்கட்சி செய்யுமா? செயற்கையாக கள்ள ஒட்டு ஏதும் போட்டு பாஜக-வின் தாமரை ஆட்சியை தமிழகத்தில் மலர செய்வீர்களா என நெட்டீசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

bjp

ஏற்கனவே, சமூக வலைத்தளங்களை மிகப்பெரிய ஆயுதமாக கையில் வைத்திருக்கும் பாஜக அரசு மீது, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை ஈர்க்கிறது. அந்த தகவல்களை தோலுரித்து காட்டுபவர்களை மிகவும் மோசமான ரீதியில் அக்கட்சி ட்ரோல் செய்து கையாள்கிறது என குற்றச் சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், காவிக் கொடியை நாடு முழுவதும் பறக்க விட, வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பாஜக ஏதோ குளறுபடி செய்து வருகிறது எனவும், பின் வாசல் வழியாக தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சி செய்கிறது எனவும் குற்றச் சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், செயற்கையாக எதையாவது செய்து தமிழகத்தில் பாஜக-வின் தாமரையை மலர செய்வோம் என அக்கட்சியின் மாநில தலைவர் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.