செப்டம்பரும் கை விட்டது! கார் தயாரிப்பு நிறுவனங்களின் தொடரும் சோகம்!

 

செப்டம்பரும் கை விட்டது! கார் தயாரிப்பு நிறுவனங்களின் தொடரும் சோகம்!

கடந்த செப்டம்பர் மாதத்திலும் வாகன விற்பனை மந்தகதியில் இருந்ததால் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.

கடந்த ஓராண்டு காலமாக வாகன விற்பனை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக விற்பனை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. விற்பனையை அதிகரிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலை குறைப்பு மற்றும் அதிரடி சலுகைகளை வழங்கின.  ஆனாலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதமும் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. 

கார் மாடல்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் உள்நாட்டில் மொத்தம் 9,301 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதேசமயம் 2018 செப்டம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 14,820 கார்களை விற்பனை செய்து இருந்தது. ஆக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் விற்பனை 37 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பரில் மொத்தம் 57,705 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 8.1 சதவீதம் குறைவாகும். 2018 செப்டம்பர் மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் 62,757 கார்களை விற்பனை செய்து இருந்தது.

டாடா மோட்டார்ஸ் கார் மாடல்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸின் விற்பனை நிலவரமும் மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. டாடா மோட்டார்ஸ் கடந்த செப்டம்பரில் மொத்தம் 36,376 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 2018 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 48 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் 69,991 வாகனங்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து இருந்தது. இந்நிலையில், பண்டிகை காலத்தில் வாகன விற்பனை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.