சென்னை விமான நிலையத்தில் 12½ கிலோ தங்கம் பறிமுதல் – 14 பேர் சரண்

 

சென்னை விமான நிலையத்தில் 12½ கிலோ தங்கம் பறிமுதல் – 14 பேர் சரண்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை செய்ததில் 12½ கிலோ தங்கம், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை செய்ததில் 12½ கிலோ தங்கம், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் நிகழ்வு சென்னை விமான நிலையத்தில் வாடிக்கையாகி வருகிறது. சில சுங்கத்துறை அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக நேற்று மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர்.

ttn

அப்போது 18 பயணிகள் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 12½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணிகளிடம் சோதனை நடத்தி வெளியே அனுப்பிய பின்னரே இந்த கடத்தல் தங்கம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் இந்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், 18  பேரும் விசாரணைக்காக விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டபோது ஆளுக்கொரு திசையாக ஓடி மறைந்தனர்.

அவர்களைப் பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர்களின் பாஸ்போர்ட் விவரத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று நள்ளிரவு கடத்தல்காரர்கள் 14 பேர் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் கடத்தல்காரர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.