சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜர்

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜர்

உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறையை தரக்குறைவாக விமர்சித்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்

சென்னை: உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறையை தரக்குறைவாக விமர்சித்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருக்கும் மெய்யபுரம் கிராமத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஒருசில வழித்தடங்களில் ஊர்வலம் செல்ல தடை இருப்பதை சுட்டிக்காட்டிய காவல்துறையினரிடம் ராஜா வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக அவர் விமர்சித்தார்.

இதனையடுத்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அது என்னுடைய குரலே இல்லை என ஹெச்.ராஜா மறுப்பு தெரிவித்திருந்தார். எனினும், அவர் உட்பட 8 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய 10 பேர் கொண்ட 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஆனால், அவரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.

அதேபோல், ஹெச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.