சென்சார் செய்தாலும் படத்தை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு: அதிமுக-வினருக்கு ஐடியா கொடுக்கும் எஸ்.வீ.சேகர்

 

சென்சார் செய்தாலும் படத்தை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு: அதிமுக-வினருக்கு  ஐடியா கொடுக்கும் எஸ்.வீ.சேகர்

சமூக ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டால் படத்தின் காட்சிகளை நீக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என நடிகரும் இயக்குநருமான எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். 

சென்னை: சமூக ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டால் படத்தின் காட்சிகளை நீக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என நடிகரும் இயக்குநருமான எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. இப்படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமியின் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட கோமளவள்ளி என்ற பெயர், தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்ட இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் தணிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.வி. சேகர், ‘குறிப்பிட்ட திரைப்படம் தணிக்கைக்குப் பின்னர் சர்ச்சை இருப்பதாகச் சமூக ரீதியில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதனை நீக்கித்தான் ஆக வேண்டும். மறுதணிக்கை செய்வது எளிமையான நடைமுறைதான். ஒரு படம் வெளியான பிறகு காட்சியை நீக்கவோ, சேர்க்கவோ மறுதணிக்கைக்கு அனுப்ப வேண்டும். ஒரு படம் தணிக்கை செய்யப்பட்ட பின்னரும் அதனைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. வியாபாரத்தை மட்டும் கணக்கில் கொண்டு கலைஞர்கள் கதை, காட்சிகளைத் திரைப்படத்தில் உருவாக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.