செங்கோட்டையில் கொடி ஏற்றும் பிரதமர்! என்ன சொல்கிறது வரலாறு? நேரு முதல் மோடி வரை…

 

செங்கோட்டையில் கொடி ஏற்றும் பிரதமர்! என்ன சொல்கிறது வரலாறு? நேரு முதல் மோடி வரை…

நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மாபெரும் மனித வளம், தொழில்நுட்ப வளர்ச்சி, ராணுவ பலம் என எல்லா துறையிலும் வியக்க வைத்து வரும் இந்தியா, 73 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் வழக்கம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது? சுதந்திர தின கொண்டாட்டத்தில் கடைபிடிக்கப்படும் மரபுகள், நடைமுறைகள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்.

செங்கோட்டையில் கொடி ஏற்றும் பிரதமர்! என்ன சொல்கிறது வரலாறு? நேரு முதல் மோடி வரை…

நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மாபெரும் மனித வளம், தொழில்நுட்ப வளர்ச்சி, ராணுவ பலம் என எல்லா துறையிலும் வியக்க வைத்து வரும் இந்தியா, 73 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் வழக்கம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது? சுதந்திர தின கொண்டாட்டத்தில் கடைபிடிக்கப்படும் மரபுகள், நடைமுறைகள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்.

 

சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றும் நிகழ்வு மிக முக்கியமானது. கொடி ஏற்றும் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி தற்போதைய பிரதமர் மோடி வரையில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்படும் அந்த மாடத்திற்கு பெயர் லஹோரி வாயில்.  இந்த லஹோரி வாயில் தான் டெல்லி செங்கோட்டையின் முதன்மையான நுழைவு வாயில். முகலாயர்கள் ஆட்சி காலத்தில் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் செல்லும் படைகள் இந்த வாயிலைத்தான் பயன்படுத்தினர். அதனால் தான் இது லஹோரியா வாயில் என அழைக்கப்படுகிறது. எண் கோணத்தில் இரு தூண் போன்ற அமைப்பும், நடுவில் செவ்வகம் போன்ற அமைப்பில் இது அமைந்துள்ளது.  

1638 முதல் 1649 வரை ஆட்சி செய்த முகலாய பேரரசர் ஷாஜகான் ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு தலைநகரை மாற்றிய போது 1639 ல் செங்கோட்டையை கட்டினார். கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆனது இந்த கோட்டையை முழுமையாக கட்டி முடிக்க. செங்கோட்டை முகலாய பேரரரசர் ஷாஜகான் கட்டினாலும், இந்த‌ லஹோரியா வாயிலை ‌அவரது மகன் ஔரங்க சீப்தான் ‌கட்டினார்.
 
உலகப்புகழ் பெற்ற கோகினூர் வைரம், ஷாஜகானின் மயில் அரியாசனம் உள்ளிட்டவை இந்த கோட்டையில் தான் இருந்தது. முகலாய ஆட்சியின் மிக முக்கிய முடிவுகள் இந்த கோட்டையில் எடுக்கப்பட்டவையே. பாரசீக நாட்டை சேர்ந்த உஸ்தத் அஹமத் லஹோரி என்பவர் தான் செங்கோட்டையை வடிவமைத்தவர். இவர் தான் உலகஅதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் தலைமை கட்டடக்கலை பொறியாளர் ஆவார். கிலா இ  முபாரக், கிலா இ ஷாஜகான்பாத், கிலா இ முல்லா என பல பெயர்களில் இந்த கோட்டை அழைக்கப்பட்டாலும் முழுக்க முழுக்க செங்கற்களால் கட்டப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதால் இது பரவலாக செங்கோட்டை எனஅழைக்கப்படுகிறது.
 
254 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த செங்கோட்டைக்கும், ஆங்கிலேய ஆட்சிக்கும் இந்திய சுதந்திர போராட்டத்திற்கும், நேரு ஏன் இங்கு முதல் சுதந்திர தின கொடிஏற்றினார் என்பதற்கு நிறைய தொடர்புகள் உள்ளன. 

செங்கோட்டையின்‌ லஹோரியா நுழைவாயிலின் மேல் மேடை அமைத்துத்தான் நாட்டு பிர‌தமர்கள் கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்துவார்கள்.  இந்திராகாந்தி படுகொலைக்கு பின்னர், 1985 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு துளைக்காத கூண்டு அமைத்து அங்கிருந்து சுதந்திர தின உரையாற்றும் முறையை தொடங்கி வைத்தார். அவருக்கு பின் வந்த பிரதமர்களும் அதனை மரபாக கடைபிடித்தாலும், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி கண்ணாடி கூண்டுக்குள் அல்லாமல் திறந்த வெளியில் நின்று மக்களிடம் பேசுகிறார்.
 
நாட்டில் எவ்வளவோ முக்கிய இடங்கள் இருந்தும் ஏன் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்படுகிறது என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அதற்கு டெல்லி செங்கோட்டையை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

வேலூர் சிப்பாய் கலகம் ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிரான பெரும் புரட்சிக்கான வித்தாக அமைந்ததெனில், 1857‌ஆம் ஆண்டு டெல்லியில் வெடித்தது சிப்பாய் புரட்சி. இந்த ஆண்டில் தான் வெள்ளையர்கள் புதிய ரக துப்பாக்கி ஒன்றை இந்திய ராணுவத்தில் அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்களின் உறைகளில் மாடு மற்றும் பன்றிகொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகவும், அதனை வீரர்கள் தங்களது பல்லால் கடித்து அகற்றி பயன்படுத்த வேண்டும் என ஆங்கிலேய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவினை படையில் இருந்த இந்திய வீரர்கள் பலர் எதிர்த்தனர். மாட்டை இந்துக்கள் தெய்வமாக வணங்கியதும், பன்றிகளை பயன்படுத்த கூடாது என குரான் வழியுறுத்தியதால் இஸ்லாமியர்களும் இதனை மத பாகுபாடு இன்றி எதிர்த்தனர்.ஆனால் வெள்ளையர்கள் செவி மடுக்கவில்லை. இதன் உச்சகட்டமாக மீரட்டை சேர்ந்த மங்கள் பாண்டே என்ற படை வீரர் ஆங்கிலேய அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றார். இதற்காக மங்கள் பாண்டேவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 
இந்த சம்பவம் வட மாநிலங்கள் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ,வணிகம் செய்ய வந்தவன் அடிமைபோல் நடத்துவதா என  பொங்கி எழுந்தனர். திரும்பிய பக்கம் எல்லாம் கலவரம். அப்போது  கலக்காரர்கள் என ஆங்கிலேயர்களால் தேடப்பட்டவர்கள் அனைவரும் தஞ்சம் புகுந்தது டெல்லி செங்கோட்டையில் தான். தஞ்சம் கொடுத்தது முகலாய சாம்ராஜியத்தின் கடைசி அரசரான பகதூர் ஷா ஜாபர். இவர் ஆங்கிலேயே அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்த எந்த ஒரு அதிகாரமும் இல்லாத ஒரு அரசர் அவ்வளவே.அப்போது அவருக்கு வயது 82.
 
சிப்பாய் புரட்சிக்குத் தலைமை தாங்கியவரான பகத் கான் டெல்லி செங்கோட்டையில் தஞ்சம் புகுந்து அரசர் பகதூர் ஷா ஜாபரிடம் உதவி கோரி கலகத்திற்கு தலைமை ஏற்க கோரிக்கை வைத்தார். வெள்ளையரை நாட்டை விட்டு வெளியேற்றும் வரை இவரே அனைவருக்கும் மன்னராக இருப்பார் என மற்ற அரசர்கள் உறுதியளித்தனர். இவரும்ஆயுதங்கள் கொடுத்து உதவினார். விரைவிலேயே டெல்லி செங்கோட்டை ஆங்கிலேயருக்கு தலைவலியாக மாறியது.
 
பின்னர் டெல்லியில் உள்ள ஹுமாயூன்  கல்லறையில் ஒளிந்துகொண்ட பகதூர் ஷா, தனது வாரிசுகளை ஆங்கிலேயர் சுட்டுக் கொன்றதையடுத்து அவர்களிடம் சரணடைந்தார். அதன்தொடர்ச்சியாக பர்மாவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார். பின்னர் அங்கேயே உடல் நலிவுற்று மரணமடைந்தார் பகதூர் ஷா.  
 
பகதூரை நாடு கடத்திய பிறகு செங்கோட்டையின் ஒரு பகுதியை மருத்துவமனையாகவும், ஆயுதங்களைச் சேமிக்கும் கிடங்காவும் பயன்படுத்த தொடங்கினார்கள் ஆங்கிலேயர்கள். பின்னர் அலுவல்கள் நடக்கும் இடமாகவும் மாற்றிக்கொண்டு வெள்ளை அதிகாரிகள் அங்கேயே குடியேறினார்கள். சிப்பாய் புரட்சிக்குப் பிறகே கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து நேரடியாக இங்கிலாந்து அரசியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நாடு வந்தது.
 

இந்திய ராணுவத்தை நிறுவியவரான சுபாஷ் சந்திர போஸ்க்கு டெல்லி செங்கோட்டை மீது அலாதி ப்ரியம் இருந்தது. இதனால்தான், பர்மாவின் தலைநகர் ரங்கூனில் புதைக்கப்பட்ட மன்னர் பகதூரின் கல்லறைக்கு ஒருமுறை நேரில் சென்று சுபாஷ் சந்திரபோஸ் மரியாதை  செலுத்தியதாக தகவல் உண்டு. பகதூர் ஷா அடிக்கடி உரைத்த டெல்லி சலோ என்ற வார்த்தையை தனது தாரக மந்திரமாகக்கொண்டு சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து வழி நடத்தினார். 
 
நாட்டின் விடுதலையில் செங்கோட்டை பெரியளவில் முக்கியத்துவம் பெறுவதற்கு மற்றொரு காரணம், இந்திய ராணுவ வீரர்கள் மீதான விசாரணை இந்தசெங்கோட்டையில் நடைபெற்றதும்  ஆகும்.
 
இரண்டாம் உலக போரில் ஜப்பானுக்கு ஆதரவாக , போர் புரிந்ததாக கூறி நாடு முழுவதும் சுபாஷ் சந்திர போஸின் இந்திய ராணுவ படையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். முக்கியமாக ராணுவ அதிகாரிகளான நவாஷ் கான், பிரேம் குமார் சாகல், குர்பாக்ஸ் சிங் தில்லான் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி செங்கோட்டையில் உள்ள படிக் கிணறுகளில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பம்பாய்கலகம் என அடுத்தடுத்து நாடு முழுவதும் வன்முறைகள் ஏற்பட்டு ஆங்கிலேய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
 

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத எழுச்சியை, ஒற்றுமையை, வெகுஜன போராட்டத்தை, செங்கோட்டையில் நடத்தப்பட்ட விசாரணைகள் உருவாக்கியதாக சுதந்திர போராட்ட காலத்தில் நேருவே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் 
 
இப்படி இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய மையமாக செங்கோட்டை திகழ்ந்துள்ளது. இதன் காரணமாகவும், முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க சுபாஸ்சந்திர போஸ் இல்லாததாலும் , டெல்லி நோக்கி செல், செங்கோட்டையை கைப்பற்று என்ற அவரது முழக்கங்களுக்கு மரியாதை செலுத்தவுமே முதல் சுதந்திர தினகொண்டாட்டங்கள் செங்கோட்டையில் நடத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இது தற்போது வரை மரபாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.

” பல ஆண்டுகளுக்கு முன், காலத்துடனும், விதியுடனும் நாம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டோம்.இப்போது அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் நேரம் வந்துள்ளது. பழமையில் இருந்து புதுமைக்குள் காலெடுத்து வைக்கிறோம். இது ஒரு அரிய நேரம். இந்த நேரத்தில் இந்திய மக்களுக்காகவும், மனித குலத்தின் நன்மைக்காகவும் நம்மைநாமே அர்பணித்துக்கொள்ள சபதம் ஏற்போம்: ” இவை தான் நாட்டின் முதல் பிரதமரான நேரு தனது முதல் சுதந்திர தின உரையில் உதிர்த்த வார்த்தைகள்.
 
பல போர்கள், போராட்டங்கள், கலகங்கள், புரட்சிகள், தியாகங்களுக்குப்பிறகு சுதந்திரத்தை‌ பெற்று 72ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் வளர்ச்சியை நோக்கி நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.  ஒட்டுமொத்த, ஒருங்கிணைந்த வளர்ச்சியை கட்டமைக்க முயன்று‌கொண்டிருக்கிறோம். பல வேறுபாடுகள், ‌பல முரண்பாடுகள், கருத்து மோதல்கள் இருந்தாலும்,  சுதந்திரமாக இருக்கிறோம்.