சுஜித் உயிரை பறித்த ஆழ்துளைக்  கிணறு மூடப்பட்டது!

 

சுஜித் உயிரை பறித்த ஆழ்துளைக்  கிணறு மூடப்பட்டது!

கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில்  இன்று காலை 8.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது

குழந்தை சுஜித் விழுந்து உயிரிழந்த ஆழ்துளைக் கிணறு கான்கிரீட் கலவையால் மூடப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில்  சுஜித் என்ற 2 வயது குழந்தை தனது வீட்டின் தோட்டத்திலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க 80 மணிநேரத்தையும்  கடந்து மீட்பு படையினர் முயற்சி செய்தனர். தற்போது ஆழ்துளைக் கிணற்றின் அருகில் சுரங்கம்  போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. ரிக் இயந்திரம் பழுதானதால் தற்போது போர்வெல் மூலம் துளையிட்டு பின்பு மீண்டும் ரிக் இயந்திரம்  மூலம் பள்ளம் அகலப்படுத்தப்பட இருந்த நிலையில் பணிகள் துரிதமாக நடைபெற்றன. 

surjith

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக  சுஜித் உயிரிழந்ததாக  நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர்  சுஜித்தின் உடலை  மீட்டனர்.  பின்னர்  மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் உடல்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில்  இன்று காலை 8.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

sujith

இத்தனை துயரத்திற்கும் காரணமான 600 அடி  ஆழம் கொண்ட மூடப்படாத அந்த ஆழ்துளைக்  கிணறு 
சுஜித்தின் நல்லடக்கம் நடந்தபோது, கான்கிரீட் கலவையால் மூடப்பட்டது. இனி வரும் காலங்களிலாவது ஆழ்துளைக் கிணறுகளை மூட  அரசும், மக்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுஜித்தின்  இந்த மரண  போராட்டம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அதை இனியாவது கடைப்பிடிக்க  முயல்வோம்!