சிவன் மலை கடவுள் உத்தரவு பெட்டியில் முருகன் வேல் வைப்பு – கொரோனா பாதிப்பு குறையும் என்று நம்பிக்கை

 

சிவன் மலை கடவுள் உத்தரவு பெட்டியில் முருகன் வேல் வைப்பு – கொரோனா பாதிப்பு குறையும் என்று நம்பிக்கை

சிவன் மலை கடவுள் உத்தரவு பெட்டியில் முருகனின் வேல் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறையும் என்று நம்பப்படுகிறது.

திருப்பூர்: சிவன் மலை கடவுள் உத்தரவு பெட்டியில் முருகனின் வேல் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறையும் என்று நம்பப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் மலை மீது உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதம்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் இந்த கோயிலானது பல ஆன்மீக சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தக் கோயிலில் கடவுள் உத்தரவு பெட்டி என ஒன்று உள்ளது. அந்த பெட்டியில் குறிப்பிட்ட பொருளை வைத்து வழிபட்டால் நன்மை நடக்கும் அல்லது கெட்ட நிகழ்வுகள் குறித்து அறிகுறிகள் தென்படும் என்று நம்பப்படுகிறது.

அந்த கடவுள் உத்தரவு பெட்டியில் என்ன பொருள் வைக்க வேண்டும் என அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் ஒருவரின் கனவில் கடவுள் தோன்றி கூறுவார் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து கோயில் அர்ச்சகர்களிடம் பக்தர்கள் தங்களின் கனவில் வந்த பொருள் குறித்து கூற வேண்டும். அர்ச்சகர்கள் பூ போட்டு பார்த்து வெள்ளைப் பூ வந்தால் அந்த பொருள் ஆண்டவன் பெட்டியில் வைக்கப்படும். இந்நிலையில், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி கடவுள் உத்தரவு பெட்டியில் மஞ்சள் வைக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் கனவில் கடவுள் உத்தரவு பிறப்பித்தாராம். இதைத் தொடர்ந்து, அப்பெட்டியில் மஞ்சளுடன் கூடிய தாலி கயிறு வைக்கப்பட்டது.

lord

மார்ச் மாதம் தொடக்கத்தில் இந்தியாவிலும், அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு பரவலாக பரவத் தொடங்கியது. இதுகுறித்து எச்சரிக்கவே கடவுள் பெட்டியில் மஞ்சள் வைக்குமாறு கடவுள் உத்தரவிட்டுள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர்.  

ஏனெனில் மஞ்சள் என்பது நோய் தடுப்பு சக்தியைக் கொண்டதாகும். வைரஸ் பரவலை தடுக்க நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும், நோய் தடுப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் மஞ்சளை  கடவுள் தேர்வு செய்ததாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்த நிலையில், கடவுள் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து வழிபட வேண்டுமென நெல்லையை சேர்ந்த 50 வயது பக்தர் ஒருவரின் கனவில் கடவுள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தற்போது வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு வேல் கடவுள் உத்தரவு பெட்டியில் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறையும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் கடவுள் கனவில் வந்து குறி சொன்ன அந்த நெல்லை பக்தர் கூறுகையில், இதுவரை ஒரு முறை கூட சிவன் மலை கோயிலுக்கு செல்லவில்லை என்றாலும் தன் கனவில் கடவுள் வந்து உத்தரவு பிறப்பித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.