சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் எதிரொலி! சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வெறிச்சோடிய காஷ்மீர்!

 

சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் எதிரொலி! சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வெறிச்சோடிய காஷ்மீர்!

காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டது முதல் அங்கு சுற்றுலா செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆகஸ்ட் முதல் அந்த யூனியன் பிரதேசம் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கியது. மேலும், ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைப்பு, தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் முடக்கம், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு உள்ளிட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

ஜம்மு அண்டு காஷ்மீர்

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியவுடன் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. கடந்த அக்டோபர் இறுதியில் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வமாக உதயமாகின. அதேசமயம் காஷ்மீரில் நிலவிய பதற்றமான சூழ்நிலையால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதை தவிர்த்தனர். இதனால் காஷ்மீரில் சுற்றுலா மிகவும் பாதிக்கப்பட்டது.

ஜம்மு அண்டு காஷ்மீர்

கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 32 ஆயிரம் உள்நாட்டு பயணிகள் மட்டுமே காஷ்மீருக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். சென்ற ஆண்டின் இதே காலத்தில் 2.49 லட்சம் உள்நாட்டு பயணிகள் காஷ்மீரை சுற்றி பார்த்தனர். ஆக, காஷ்மீருக்கு உள்நாட்டு பயணிகளின் வருகை 87 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், கடந்த நவம்பர் வரையிலான 4 மாத காலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் 82 சதவீதம் குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அங்குள்ள மக்களின் வருவாயும் பாதித்தது.