சிறப்பு அந்தஸ்து நீக்கம் எதிரொலி! நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டும் காஷ்மீர் பெண்….

 

சிறப்பு அந்தஸ்து நீக்கம் எதிரொலி! நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டும் காஷ்மீர் பெண்….

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள தனது நிலத்தை விற்பனை செய்ய குஜராத்தில் வசித்து வரும் காஷ்மீர் பெண் முடிவு செய்துள்ளார்.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இதனால் காஷ்மீரில் பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலத்தை வாங்கவோ, விற்கவோ முடியும். ஆகையால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை அங்கு வெளிமாநிலத்தவர்கள் நிலத்தை வாங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. 

சட்டப்பிரிவு 370 நீக்கம்

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கி வந்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019 நாடாளுமன்றத்தின இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் இனி இந்தியர்கள் யாரும் காஷ்மீரில் நிலத்தை வாங்கலாம், விற்கலாம் என நிலை ஏற்பட்டுள்ளது.

நிலம் விற்பனை

இதன் எதிரொலியாக, குஜராத் மாநிலம் சூரத்தில் கணவர் ரவுனக் வர்மாவுடன் வசித்து வரும் காஷ்மீரை சேர்ந்த மிருதுளா சர்மா காஷ்மீரில் உள்ள தனது நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் உதம்புர் மாவட்டத்திலிருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள பான்ஜார் கிராமத்தில் அவருக்கு நிலம் உள்ளது. தனது பங்கு நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக தனது பெற்றோர்  சம்மதத்தையும் பெற்று விட்டார். தற்போது நல்ல விலை கிடைத்தால் விற்று விடலாம் என்று இருக்கிறார். 

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து மிருதுளா சர்மா கூறுகையில், காஷ்மீர் மக்களின் பயம் முற்றிலும் ஒழிந்து விட்டது. அங்கே முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கை உள்ளது என கூறினார்.