சிறப்புக்கட்டுரை: சாதிய ஒழிப்பு சாத்தியமில்லை?

 

சிறப்புக்கட்டுரை: சாதிய ஒழிப்பு சாத்தியமில்லை?

காதல், கல்வி, அதிகாரத்தை கைப்பற்றி நமக்கான உரிமையை பெறுவது என மூன்று தளத்தில் சாதிய ஒழிப்பு பற்றி விவாதிக்கப்படுகிறது.

– அருண் பாண்டியன்

ஒவ்வொரு முறை சாதியப் படுகொலை நிகழும்போதும், சாதிய ஒழிப்பு பற்றிய கலந்துரையாடலும் விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காதல், கல்வி, அதிகாரத்தை கைப்பற்றி நமக்கான உரிமையை பெறுவது என மூன்று தளத்தில் சாதிய ஒழிப்பு பற்றி விவாதிக்கப்படுகிறது.

தொடர் ஆணவக்கொலைகளால் காதல் வேண்டாம் என்ற நிலைக்கு பலர் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காதல் இந்த லிஸ்டிலே கிடையாது என்பதுதான் உண்மை, அது சாதிய ஒழிப்பதற்காக வெவ்வேறு சாதியை சேர்ந்த இருவர் எடுக்கும் முடிவல்ல. இருவர் முடிவில் சாதி கொஞ்சம் செருப்படி வாங்குகிறது. அதையே பெரும்பான்மை சமூகத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அடுத்ததாக கல்வி, இதன்மூலம் நிச்சயமாக சாதிய ஒழிப்பை சாத்திய படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் இதற்கு அதிகாரத்தின் உதவி இதற்கு நிச்சயமாக அவசியம்.

caste

தீண்டாமை ஒரு பாவச் செயல், பெருங்குற்றம், மனிதத்தன்மையற்ற செயல் என்ற வாசகங்களை தாங்கி நிற்கும் பாடப் புத்தகத்தை படித்துவிட்டு வெளியே வரும் மாணவன் ஒருவனால் சாதிவெறியோடு வாழ முடிகிறது என்றால் பள்ளியும் கல்லூரியும் அவனுக்கு எதை கற்றுக்கொடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி முடித்து வெளியேறும் வரை தீண்டாமை, சாதிய கொடுமைகள் பற்றிய வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், லெனின் போன்றோரின் சிந்தனைகள் அவர்களை சரியாக சென்றடைய வேண்டும். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச உல்டாக்களுக்கு பாடப் புத்தகத்தில் போதுமான இடம் கிடைக்கும் போது, தலித் விடுதலை போராளிகளுக்கும் இடமளிக்க வேண்டும். பல தலித் விடுதலை போராளிகளின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

cc

அம்பேத்கர் பற்றி பாடம் எடுக்கும்போது, அவருக்கு தண்ணியை கையில் ஊற்றி குடிக்க சொன்னார்கள், வகுப்பறையில் ஓரமாக அமர வைக்கப்பட்டார்னு அவரது பழைய பஞ்சாங்கத்தை பாடாமல், தலித் மக்களின் உண்மையான வலியை ரத்தமும் சதையுமாய் பாட புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும். முகலாய அரசர்களின் கதைகளில் அவர்களை கொடூரமானவர்கள், நம் நாட்டை சூறையாட வந்தவர்கள் என போதிக்கும் கல்விமுறை, தலித் மக்களுக்கு பெரும்பான்மை சமூகம் செய்த கொடுமைகளை சொல்வதால் ஒன்றும் குறைந்துவிடாது.

இதையெல்லாம் பாடத் திட்டத்தில் சேர்த்தால்தான் இனிவரும் தலைமுறைகள் சாதியை கடக்க முடியும். மக்களுக்கான கட்சி என மார்தட்டிக் கொள்ளும் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி கொள்கைகளில் ஒன்றாக இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ambeth

மாணவ சமுதாயம்தான் வேர். அங்கு விஷத்தை விதைத்து விட்டு வளர வளர ஒப்பாரி வைப்பது வீண். 12-ஆம் வகுப்பு முடிப்பதற்குள் ஒருவனுக்கு சாதி மற்றும் அரசியல் சார்ந்த தெளிவான புரிதல் அவசியம். இல்லையென்றால் சாதிய ஒழிப்பு சாத்தியமே இல்லை. இதை அரசாங்கம் செய்யவில்லை என்றாலும் தலித் விடுதலை இயக்கங்களும், சாதி ஒழிப்பு இயக்கங்களும் பள்ளி கல்லூரியாக சென்று வகுப்பெடுக்கலாம்.