சிறப்புக்கட்டுரை: இலவச திட்டங்களால் சீரழிந்துவிட்டதா தமிழ்நாடு?

 

சிறப்புக்கட்டுரை: இலவச திட்டங்களால் சீரழிந்துவிட்டதா தமிழ்நாடு?

தமிழகத்தில் திரைப்படங்கள் வெளியாவதும், அதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதும் சமீப காலமாக வாடிக்கையாகிவிட்டது.

கட்டுரையாளர்: சஞ்ஜீவ் ரவிச்சந்திரன்

தமிழகத்தில் திரைப்படங்கள் வெளியாவதும், அதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதும் சமீப காலமாக வாடிக்கையாகிவிட்டது.

அதிலும், குறிப்பாக விஜய் திரைப்படம் என்றாலே சர்ச்சைகளும் சேர்ந்து உருவாகிவிடுவது வழக்கம். உதாரணமாக, தலைவா திரைப்படத்தின் டைட்டில் கார்டில் ‘டைம் டூ லீட்’ என இடம்பெற்றிருந்த வசனம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எரிச்சலடைய செய்ததும், அதனால் அப்படம் வெளியாக நேர்ந்த சிரமங்கள் அனைத்தும் நாம் அறிந்த ஒன்று தான்.

அதேபோல், சர்காருக்கு முன் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தில் கோயில்களை விஜய் விமர்சித்திருப்பதாக கூறி பாஜகவினர் செய்த களேபரங்களும், அதனால் ‘மெர்சல்’ படத்திற்கு கிடைத்த விளம்பரத்திற்கும் விஜய் ரசிகர்கள் இன்றளவும் பாஜகவினருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

அந்த வகையில், தற்போது வெளியாகி சர்ச்சையில் சிக்கியிருக்கும் ‘சர்கார்’ திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வழங்கப்பட்ட மிக்ஸி, உள்ளிட்ட பொருட்களை படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தூக்கி போட்டு எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதோடு இல்லாமல், படத்தின் வில்லியான வரலட்சுமி கதாபாத்திரத்துக்கு ஜெயலலிதாவின் இயற்பெயராக கூறப்படும் கோமளவள்ளி என பெயரிட்டிருந்தது அதிமுகவினரை கொதிப்பின் உச்சத்திற்கே தள்ளியுள்ளது.

இங்கு அதிமுகவினரின் கூச்சல்களை, தலைவிக்காக தொண்டர்கள் இடும் வெற்று கூச்சல்கள் என நாம் கடந்து சென்றாலும், கவனிக்க வேண்டிய சில விடயங்களும் உள்ளன.

தற்போது தமிழகம் இருப்பது போல், 60 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து விடவில்லை, ஏற்றத்தாழ்வு நிறைந்த நம் சமுதாயத்தில் திராவிட இயக்கங்களின் தலை எடுப்பிற்கு பின் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் கொடுத்த மதிய உணவு திட்டத்தை ‘சத்துணவு’ திட்டமாக மாற்றி அமைத்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இன்று சினிமா துறையில் இருந்து அரசியல் கனவுடன் வரும் நடிகர்களின் முப்பாட்டன் எம்.ஜி.ஆர் என்பதை நாம் மறுக்க முடியாது.

அதன்பின், ஏழை எளியோருக்கு வீடு வழங்கும் திட்டமான ‘சமத்துவபுரம்’ திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார். ஊரும், சேரியுமாக பிரிந்து கிடந்த சமூகத்தை முற்போக்கு சிந்தனைக்கு அழைத்துச் சென்ற திட்டமாக இன்றளவும் அந்த திட்டம் போற்றப்படுகிறது.

அதன்பின் மருத்துவ காப்பீடு திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான ஆரம்ப சுகாதார நிலையம், 2 ஏக்கர் நிலம், உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கேஸ் ஸ்டவ், இலவச சைக்கிள் ஆகியவையும் கருணாநிதி ஆட்சி காலத்தின் இலவச திட்டங்களாக அறியப்படுகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவும் லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, ஆடு மாடு, கோழி, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம், தாலிக்கு 8 கிராம் தங்கம், மாதந்தோறும் 20 கிலோ அரிசி ஆகிய திட்டங்களை துவக்கி வைத்துள்ளார்.

மேல்தட்டு மக்களாக தங்களை காட்டிக் கொள்ள முயற்சிக்கும் மக்களுக்கு இத்திட்டங்களின் சிறப்புகள் குறித்து புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஜன்னல் வழியாக டிவி பார்த்தவர்களுக்கும், விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கும், சாதி கொடுமைகளுக்கு ஆளானவர்களுக்கும், சட்னி அறைப்பதற்கு ஆட்டுக்கல் பிடித்தவர்களுக்கும், குடிசை வீட்டில் காற்றில்லாமல் தூங்கிவர்களுக்கும் இந்த திட்டங்களை விமர்சிக்க மனம் வந்தால் அது காலத்தின் கொடுமை தவிர வேறு என்ன இருக்க முடியும்?