சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்பு

 

சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்

டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அவரது அதிகாரங்களை பறித்ததுடன், சிபிஐ இணை இயக்குனர் நாகேஸ்வர் ராவை தற்காலிக சிபிஐ இயக்குனராகவும் மத்திய அரசு நியமித்தது.

தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என உத்தரவிட்டது.

அவரது அதிகாரங்களை பறிக்க முடியாது. அவர் தொடர்ந்து பணியாற்றலாம். அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் உடனே ஒப்படைக்கவேண்டும். அதேநேரம் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது எனவும் தனது உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா இன்று மீண்டும் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.