சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

 

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

சென்னை: சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னத்தம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அப்போது லாரியில் ஏற்றும் போது சின்னத் தம்பியின் தந்தங்கள் உடைந்தது. மேலும், கும்கி யானைகள் குத்தியதில் அதன் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னத்தம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர். ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னத்தம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது.

கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

சின்னத்தம்பி யானை குறித்து கருத்து தெரிவித்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தினால் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. அப்போது, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சின்னத்தம்பியை காட்டுக்குள் அனுப்பவே முயற்சி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி, சின்னத்தம்பி யானைக்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.