சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா; 3 ஆயிரம் நடன கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா; 3 ஆயிரம் நடன கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3 ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் பாரத நாட்டியம் ஆடி நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் செய்தது கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில்  3 ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் பாரத நாட்டியம் ஆடி நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் செய்தது கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று நாட்டியாஞ்சலி தொடங்கி 5 தினங்களுக்கு நடைபெறும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் சபாபதி சங்கீத கான சபா டிரஸ்ட் சார்பில் நவராத்திரி சம்பூர்ண இசை விழா இம்மாதம் 9-ம் தேதி தொடங்கி, 13-ம் தேதி வரை நடைபெற்றது.

நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, பாரத நாட்டியக் கலைஞர்கள் 3 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் கோயிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடனமாடினர். 6 வயதிலிருந்து 10 வயது வரை உள்ளவர்கள் பல்லவிக்கும், 11 வயதிலிருந்து 15 வயது வரை உள்ளவர்கள் அனுபல்லவிக்கும், 16 வயதிலிருந்து 20 வயது வரை சரணத்துக்கும், 21 வயதிலிருந்து 60 வயது வரை உள்ளவர்கள் கீர்த்தனை சரணம் பாடலுக்கும் பரத நாட்டியம் ஆடி, தங்களது நடனத்தை நடராஜருக்கு அர்ப்பணித்தனர்.

இதனை அடுத்த இதுதொடர்பான சான்றிதழ்களை சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்கள் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பெற்றுக் கொண்டார். ஒரே நேரத்தில் 3 ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் பாரத நாட்டியம் ஆடியது கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, ஒரே சமயத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஆயிரங்கால் மண்டபத்துக்குள் சென்றதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே வழி மட்டுமே இருந்ததால் நெரிசலில் சிக்கி நாட்டிய கலைஞர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால் அங்கு கூச்சல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.