சிட்னி டெஸ்ட்: முன்கூட்டியே முடிந்த 3-ஆம் நாள் ஆட்டம்; நெருக்கடியில் ஆஸ்திரேலியா

 

சிட்னி டெஸ்ட்: முன்கூட்டியே முடிந்த 3-ஆம் நாள் ஆட்டம்; நெருக்கடியில் ஆஸ்திரேலியா

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழை மற்றும் வெளிச்சமின்மை காரணத்தால் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது

சிட்னி: இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழை மற்றும் வெளிச்சமின்மை காரணத்தால் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 167.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193 ரன்களும் பன்ட் 159 ரன்களும் எடுத்தனர். பின்னர் நேற்றைய இரண்டாம் நாளின் இறுதி பத்து ஓவர்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழக்காமல் 24 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, இன்றைய மூன்றாம் நாளின் தொடக்கம் முதல் உணவு இடைவேளை வரையிலான பகுதியில் 30 ஒவர்களில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 98 ரன்கள் சேர்த்து நிதானம் காட்டியது. ஸ்கோர் 72 ஆக இருந்தபோது க்வாஜா, தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும் முயற்சியில், மிட் விக்கெட் பகுதியில் நின்றிருந்த புஜாராவுக்கு கேட்ச் கொடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மூன்று பவுண்டரிகளோடு 79 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார் க்வாஜா.

kuldeep

அந்த அணியின் ஸ்கோர் 128 ரன்களாக இருந்தபோது, அதுவரை சிறப்பாக ஆடிவந்த மார்கஸ் ஹாரிஸ், சிறிய கவனக்குறைவால் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு பின் விழுந்த முதல் விக்கெட் இது. அடுத்ததாக வந்த ஷான் மார்ஷ், 13 பந்துகளை சந்தித்தார். எட்டு ரன்கள் (இரண்டு பவுண்டரிகள் ) அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ரஹானேவுக்கு எளிய ஸ்லிப் கேட்ச் கொடுத்தார். அப்போதைய ஸ்கோர் 144.

அடுத்த மூன்று ஓவர்களில் மேலும் எட்டு ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் நிதானமாக ஆடி வந்த லபுசாஞ்சே 38 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். அதாவது அப்போது தான் மாற்றம் செய்யப்பட்டிருந்த ஃபீல்டிங் பகுதியான ஷார்ட் மிட் விக்கெட்டில் ரஹானே வலது புறம் பாய்ந்து பிடித்த அபாரமான கேட்ச்சால் ஷமிக்கு இந்த விக்கெட் கிடைத்தது. நல்லஆன் டிரைவ்தான். ஆனால் அதனை தரையோடு தரையாக ஆடாதது மட்டுமே லபுசாஞ்சே செய்த ஒரே தவறு.

இதன் பிறகு சற்றே நிலைத்த டிரேவிஸ் ஹெட்டை, தனது பந்து வீச்சில் தானே கேட்ச் பிடித்து எளிதாக வீழ்த்தினார் குல்தீப். பறந்து வந்த ஒரு ஃபுல்டாஸை முன் வந்து ஆட முயன்றதால் வந்த வீழ்ச்சி அது. அப்போதைய ஸ்கோர் 192. ஹெட் 56 பந்துகளில் இரு பவுண்டரிகளோடு 20 ரன்கள் எடுத்திருந்தார். உணவு இடைவேளை முதல் தேனீர் இடைவேளை வரை வீசப்பட்ட 28 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது.

kuldeep

68 ஓவர்களில் 198 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் தேனீர் இடைவேளை முடிந்தபின் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு, உடனேயே அதிர்ச்சி அளித்தார் குல்தீப் யாதவ். ஒவரின் முதல் ஜந்து பந்துகளில் ரன் எடுக்காத பெய்ன், கடைசி பந்தில் வெளியேறினார். அதற்கு முன்னர் வீசப்பட்ட 5 பந்துகளில் பெய்ன் திணரியது கண்கூடாக தெரிந்தது. 14 பந்துகளில் பெயன் ஒரேயொரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த ஓவருக்கு பின் மேலும் 14.3 ஓவர்கள் வீசப்பட்ட போது,  (83.3 ஓவர்களில் ) மழை குறுக்கிட்டு வெளிச்சமின்மை ஏற்பட்டதால், மேலும் 16.3 ஓவர்கள் வீசப்பட இருந்த நிலையில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 83.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று ஏற்பட்ட ஓவர்கள் இழப்பை ஈடுகட்ட நாளைய ஆட்டம் அரை மணி நேரம் முன்னதாகவே, அதாவது, இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு தோடங்கும் என்றும், 98.3 ஓவர்கள் வரை வீசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.