சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி: எஸ்.ராமகிருஷ்ணன்

 

சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி: எஸ்.ராமகிருஷ்ணன்

சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சென்னை: சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இலக்கியத்திற்கு அளிக்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது நடப்பாண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு வெளியான நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிய சஞ்சாரம் என்ற நாவலுக்காக எழுதியதற்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடப்பாண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரிசல் பூமியை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட சஞ்சாரம் நாவல், உலக இலக்கியங்கள் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தை பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், 1984-ஆம் ஆண்டிலிருந்து புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்டவைகளை எழுதியதுடன், சண்டக்கோழி, தாம் தூம், பீமா, பாபா, அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தனது சாகித்ய அகாடமி விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நாதஸ்வர கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடி ‘சஞ்சாரம்’ நாவலை எழுதினேன். சஞ்சாரம் நாவலை எழுதி முடிக்க ஒன்றரை ஆண்டுகாலம் தேவைப்பட்டது. 25 ஆண்டுகளாக முழுநேர எழுத்தாளராக இருக்கும் எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.