சலசலப்புகளுக்கு மத்தியில் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

 

சலசலப்புகளுக்கு மத்தியில் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூட்டப்படும் என அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். 

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூட்டப்படும் என அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். 

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.அந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதையடுத்து,  ரணிலுக்கு  பிரதமர் பொறுப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு  கூட்டணி கட்சிகளுடைய ஆதரவுடன் முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராகப் பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் மைத்ரி பால சிறிசேன அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் வரும் நவம்பர் 16ம் தேதி வரை முடக்கப்படுவதாக, சிறிசேன அறிவித்திருந்தார். 

ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியின் 99 எம்பிக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்பிக்களும் வாக்களிக்க உள்ளனர். ஆனால் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக  ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்பிகள் உள்ளிட்ட 105 எம்பிகள் வாக்களிக்க உள்ளனர்.  இதையடுத்து ராஜபக்சே ஆதரவாக வாக்களிக்குமாறும், அப்படி வாக்களித்தால் அமைச்சர் பதவி தர தயாராக உள்ளதாகவும், ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்பி திசநாயகே, ஐக்கிய தேசிய கட்சி எம்பி பலித ரங்கே பண்டாரவுடன் பேரம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்த மேலும் 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூட்டப்படும் என அதிபர் சிறிசேனவின் செயலாளர் உதய சேனவிரத்னே அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் கூடியதுமே நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் முன்னெடுப்பார்கள் என்பதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.