சர்கார் சர்ச்சை: ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்குப்பதிய மனு!

 

சர்கார் சர்ச்சை: ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்குப்பதிய மனு!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ படத்துக்கு எதிராக சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ படத்துக்கு எதிராக சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. சமூக பிரச்னைகள் பலவற்றை குறித்து இப்படத்தில் பேசப்பட்டிருப்பதால், பட ரிலீஸுக்கு முன்பில் இருந்தே பல்வேறு தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் எம்பளம் பதிந்த பொருட்களை எரிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதால், அதனை கண்டித்து செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் இலவச பொருட்களை அறிமுகம் செய்தனர்.

ஆனால், சர்கார் படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்திய காட்சி தமிழக அரசை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. ஆகையால் அவர் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்தும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கு தமிழக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.