சம்பளத்தை போட்டாச்சு… வேலை நடக்கட்டும்….. பி.எஸ்.என்.எல்.!

 

சம்பளத்தை போட்டாச்சு… வேலை நடக்கட்டும்….. பி.எஸ்.என்.எல்.!

பி.எஸ்.என்.எல். பணியாளர்களுக்கு கடந்த ஜூலை மாத சம்பளம் வங்கிகளில் போட்டாச்சு என அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான பி.கே. புர்வார் தகவல் தெரிவித்தார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொலைத்தொடர்பு துறையில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்ந்த நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.). ஆனால் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்பட தன்னை மாற்றி கொள்ள தவறியதால், பவுர்ணமி நிலவு தேய்ந்து அமாவாசை ஆன கதையாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிலை ஆகி போனது.

பி.எஸ்.என்.எல்.

மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.  குறிப்பாக கடந்த சில மாதங்களாக தனது பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே தடுமாறியது. இந்நிலையில், பணியாளர்களுக்கு கடந்த ஜூலை மாத சம்பளத்தை குறித்த தேதியில் கொடுக்கவில்லை மேலும் எப்போது சம்பளத்தை போடுவோம் என்பதையும் கூறவில்லை என கடந்த வாரம் பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் சங்கம் புகார் கூறியது.

பி.எஸ்.என்.எல்.

இந்நிலையில், பணியாளர்களுக்கு கடந்த ஜூலை மாத சம்பளம் வங்கிகளில் (ஆகஸ்ட் 5) போட்டாச்சு. நிறுவனத்தின் உள்வருவாய் ஆதாரம் வாயிலாகவே சம்பளத்துக்கான பணம் திரட்டப்பட்டது என பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.கே. புர்வார் கூறினார். 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொத்த வருவாயில் 75 சதவீதம் பணியாளர்களின் சம்பளமாக சென்று விடுகிறது. அதேசமயம் ஏர்டெல், வோடாபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் தங்களது வருவாயில் மிகவும் குறைந்த அளவே பணியாளர்களின் சம்பளத்துக்கு செலவிடுகின்றனர். உதாரணமாக, ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பணிபுரிகின்றனர். அந்த நிறுவனம் தனது வருவாயில் 2.95 சதவீதத்தை மட்டுமே பணியாளர்களுக்கு சம்பளமாக செலவிடுகிறது. வோடோபோன் நிறுவனத்தின் தனது மொத்த வருவாயில் 5.59 சதவீதம் மட்டுமே அதன் ஊழியர்களுக்கு சம்பளமாக செல்கிறது. அந்த நிறுவனத்தில் 9,883 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.