சமூக இடைவெளியுடன் சிறப்பு பேருந்துகளில் பயணிக்கும் அரசு ஊழியர்கள்

 

சமூக இடைவெளியுடன் சிறப்பு பேருந்துகளில் பயணிக்கும் அரசு ஊழியர்கள்

சிறப்பு பேருந்துகளில் அரசு ஊழியர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து பயணித்தனர்.

சென்னை: சிறப்பு பேருந்துகளில் அரசு ஊழியர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து பயணித்தனர்.

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல வரைமுறைகள் மற்றும் தளர்வுகளுடன் வருகிற மே 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால் 25 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மாவட்டங்களில் முன்னர் இருந்தது போலவே கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு ஊழியர்களுக்காகவும் அத்தியாவசிய பணிகளுக்காகவும் என 200 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இயக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சிறப்பு பேருந்துகளில் அரசு ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து பணியிடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

அனைத்து அரசு அலுவலங்களிலும் 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் இந்த சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்துகளில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொந்த பணத்தை கொடுத்தே பயணச்சீட்டு வாங்க வேண்டும் எனவும், இலவசம் இல்லை எனவும் அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.