சபரிமலை விவகாரம்: ரஜினி, கமல் மாற்றுக் கருத்து

 

சபரிமலை விவகாரம்: ரஜினி, கமல் மாற்றுக் கருத்து

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக புதிதாக அரசியல் களம் கண்டுள்ள நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளனர்

சென்னை: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக புதிதாக அரசியல் களம் கண்டுள்ள நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அதேபோல், மற்றொரு உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி அறிவித்தார். 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தனித்து களமிறங்குவோம் என்ற அவர், தனது கட்சியின் சின்னம், பெயர் குறித்த எந்த தகவளையும் வெளியிடவில்லை. 

இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதிக்காததின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவே இல்லை என்பது உறுதியாகிறது என்றார்.

அதேபோல், இந்த விவகாரம் குறித்து ரஜினி கூறுகையில், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சம்பிரதாயம் ஐதீகம் இருக்கும். அதில் யாரும் தலையிட கூடாது என்பது என் கருத்து. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றக் கூடாது என்றார். அதேசமயம், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தான் வரவேற்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், அங்கு பெண்களை அனுமதிக்க மறுத்து தெரிவித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.